rajinikanth praised jayalalitha in tuticorin
சமூக விரோதிகளை ஜெயலலிதா அடக்கி வைத்திருந்தார். ஆனால் இந்த அரசு அதை செய்ய தவறிவிட்டது என ரஜினிகாந்த் குற்றம்சாட்டினார்.
ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தின்போது நடந்த வன்முறையில், போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும் காயமடைந்த பலர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
அவர்களை நடிகர் ரஜினிகாந்த் இன்று நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டத்தின்போது, நடந்த வன்முறைக்கு காரணம் சில சமூக விரோதிகள் தான். சமூக விரோதிகள் மற்றும் விஷக்கிருமிகள் சிலர் போராட்டத்தில் புகுந்து வன்முறையை கட்டவிழ்த்து விட்டுள்ளனர். இதுபோன்ற சமூக விரோதிகளை கடுமையான நடவடிக்கைகளின் மூலம் ஜெயலலிதா அடக்கி வைத்திருந்தார். ஆனால் தற்போதைய அரசு அதை செய்ய தவறிவிட்டது.
போராட்டம் செய்யும்போது மக்கள் கவனமாக இருக்க வேண்டும். சமூக விரோதிகள் போராட்டத்துக்குள் புகுந்துவிடாத அளவிற்கு மக்கள் கவனமாக போராட வேண்டும் எனவும் ரஜினிகாந்த் தெரிவித்தார்.
