Rajinikanth in Kaueriyil Supreme Court ruling on political upheaval
சினிமா ரஜினிக்கு ஆயிரத்தெட்டு வில்லன்கள்! அத்தனை பேரையும் சிங்கிள் பார்வையில் சின்னாபின்னமாக்கியிருக்கிறார் ரஜினி. ஆனால், அரசியல்வாதி ரஜினிக்கு ஐந்தாறு வில்லன்கள்தான். அவர்களை சந்தித்து சமாளிப்பதற்குள் சூப்பருக்கு உடம்பு முழுக்க சுளுக்காகிவிடுகிறது. அதிலும் இந்த காவிரி வில்லன் இருக்கிறதே!
அது அவருக்கு ‘அப்டியே தலைசுத்திடுச்சு’ எனும் ஃபீலிங்கை மட்டுமல்ல தலைசுற்றலோடு சேர்த்து வாந்தி, வயிற்றுவலி எல்லாவற்றையும் வர வைத்திருக்கிறது.
ரஜினி பொதுவாழ்வில் தலையெடுக்கும் போதெல்லாம் ‘தமிழகத்துக்கு காவிரி நீர் விஷயத்துல துரோகம் செய்யும் கர்நாடகாவை பற்றி பேசாத உங்களை எப்படி நம்புறது?’ என்று பொளேர் கேள்விகளை போட்டுத் தாக்குவது தமிழ் அமைப்புகளின் வழக்கம்.

ஆனால் கடந்த இரண்டு மாதங்களாக ‘அரசியலுக்கு நான் வர வேண்டியது கட்டாயம்’ என்று வெளிப்படையாகவே அறிவித்துவிட்டு அதற்கான பூர்வாங்க பணிகளில் கால்வைத்துவிட்டார் ரஜினி. ஆனால் அடுத்த சட்டமன்ற தேர்தலின் போதுதான் தனிக்கட்சி துவக்குவேன் என்றும், அதுவரையில் தன் மன்றத்தினர் ஆர்பாட்டம், போராட்டம் என்று அரசியல் செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.
ஆனால் ரஜினி சும்மா இருந்தாலே அவரை இழுத்துவிட்டு வேடிக்கை பார்க்கும் வாய்கள், அவர் அரசியலுக்கு வருகிறேன் என்று சொன்ன பிறகு விவகாரங்களில் இருந்து விலக்கி வைத்து விடுவார்களா என்ன! இன்று உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி காவிரி நதிநீர் பங்கீடில் தமிழகத்துக்கு குறைவான அளவே நீர் கிடைக்கும்படியான உத்தரவு வந்துள்ளது.

கர்நாடகம் இந்த தீர்ப்பை கொண்டாட, தமிழகத்திலோ எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பல அமைப்புகள் அதிர்ச்சியில் போராட்டத்துக்கு ஆயத்தமாகி வருகின்றன. இந்நிலையில் ரஜினியை நோக்கி விமர்சனம் தாங்கிய கேள்விக் கணைகளை போட்டுத் தாக்க துவங்கியுள்ளனர்.
’தமிழகத்தை ஆள துடிக்கும் ரஜினியே, காவிரி விஷயத்தில் தமிழகத்துக்கு இழைக்கப்பட்டிருக்கும் அநீதி பற்றி என்ன சொல்லப்போகிறாய்?’ என்று இணையத்தில் துடிக்க துவங்கிவிட்டன விமர்சனங்கள்.
இந்த காவிரி சூழல் நிச்சயமாக, ரஜினிக்கு மிகப்பெரிய சவால் மற்றும் சறுக்கலே என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். தமிழகத்துக்கு வழங்கப்பட வேண்டிய தண்ணீர் குறைப்பு பற்றி வருத்தப்பட்டால் சொந்த மண்ணான கர்நாடகா கொதிக்கும்! கர்நாடகாவுக்கு ஆதரவு தெரிவிப்பது போல் பேசினால் அவர் ஆள துடிக்கும் தமிழகம் இன்னும் கடுப்பாகும். ஆக மதில் மேல் மாட்டிய பூனையாக தவிக்கிறார் சூப்பர். எந்த பக்கம் பாய்ந்தாலும் முள் படுக்கையே!
தமிழகத்துக்கு ஆதரவு தரும் நோக்கில் ஒற்றை வார்த்தையை அவர் உதிர்த்துவிட்டாலும் கூட போதும் எடியூரப்பா, வாட்டாள் நாகராஜ், சித்தராமைய்யாவின் கூடாரம் என அத்தனை பேரும் ரஜினியை ஸ்லைஸ் ஸ்லைஸாக பிய்த்தெடுத்துவிடுவார்கள்.

ஆக ஒட்டுமொத்தத்தில் ரஜினியின் அரசியல் எழுச்சிக்கு பெரிய ஆப்பாகவே பார்க்கப்படுகிறது இந்த சூழ்நிலை. இந்த தீர்ப்பு குறித்து கருத்து ஏதும் தெரிவிக்க வேண்டாம் என்று தன் ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு அவர் உத்தரவிட்டிருப்பதாக ஒரு தகவல் உலவுகிறது. இதை ‘அப்டியே சைலண்டா விட்டுடுவோம். தானா அடங்கிடும்.’ என்று தான் சமயோசிதமாக முடிவெடுத்துள்ளதாக ரஜினி நினைக்கலாம்.
ஆனால் இந்த சூழ்நிலை அவ்வளவு எளிதில் அடங்காது, தமிழகத்தில் எப்போது ரஜினி அரசியல் பேச துவங்கினாலும் இந்த காவிரி தீர்ப்பு கேள்வியாக அவர் முன் எழுந்து நிற்கத்தவறாது என்கிறார்கள் அரசியல் அனுபவஸ்தர்கள்.
ஆக ரஜினிக்கு காவிரியில் கண்டம்தான்!
