* பொறுப்போடு நடந்து கொள்ளுங்கள், நாங்களும் மனிதர்கள்தான். குடும்பத்தோடு வசிக்கிறோம், எதையாவது எழுதவேண்டும் என்று எழுதாதீர்கள்! என்று, அமலாபாலோடு தனக்கு திருமணம் என்று தகவல் கிளப்பியவர்களை திட்டியுள்ளார் நடிகர் விஷ்ணு விஷால். (இப்போ வருதா கோபம், சினிமா பார்க்கிற நாங்களும்தான் மனுஷங்க. குடும்பத்தோட தியேட்டருக்கு வருவோம்-ங்கிறதை என்னைக்காவது மனசுல வெச்சு படமெடுத்திருக்கீங்களா?ன்னு பப்ளிக் கேக்குதுங்கோவ்)

* தமிழகத்தை பாதிக்கும் வகையில் கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் அணைகள் கட்டுவதை ஏற்க முடியாது, அது சரியாக இருக்க முடியாது.! என்று மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். (தலைவரே நீங்க மத்தியமைச்சர், அதை நினைவுல வெச்சுக்கோங்க. தமிழகத்தை பாதிக்கிற திட்டம்னா நீங்க உத்தரவு போட்டு தடுக்கணும், அதை விடுட்டு எதிர்கட்சியாட்டமா எதிர்ப்பு தெரிவிச்சுட்டு இருக்க கூடாது.)

* 1975-ம் ஆண்டு என் முதல் படம் வந்தபோது எப்படி உற்சாகமாக இருந்தேனோ அதேபோல், 2.0 படத்தின் வெளியீட்டிற்காகவும் உற்சாகமாக காத்திருக்கிறேன்! என்று ரஜினிகாந்த் உருகியுள்ளார். (ஓ.கே. தல, 1975-ம் வருஷம் உங்க பட டிக்கெட்டுக்கு என்ன ரேட்டு கொடுத்தோமோ அதே ரேட்டை கொடுத்து இதையும் பார்க்க நாங்களும் உற்சாகமா இருக்கிறோம். ரெடி பண்ணுங்க.)

* கஜா புயல் பாதிப்பிலிருந்து அம்மாவட்ட மக்கள் மீள்வதற்கு பல ஆண்டுகளாகும். எனவே கேரள அரசும், மக்களும் தங்களால் இயன்ற உதவியை செய்திட வேண்ட்ம்! என்று ம.நீ.ம. கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கோரியுள்ளார். (ரைட்டு, தமிழ்நாட்டுக்கு உதவுறதுக்கு பினராயி ரெடியாயிட்டாருன்னு ஸ்மெல் பண்ணிட்டு, நைஸா ஒரு அறிக்கையை இறக்கிவிட்டிருக்காரு ஒலகம். இன்னா டெக்னிக்கு நைனா!?)

* நாடாளுமன்ற தேர்தலில் த.மா.கா. யாருடன் கூட்டணி என்பதை டிசம்பர் 1-ம் தேதி நடக்கும் பொதுக்கூட்டத்தில் அறிவிக்க வாசன் முடிவெடுத்துள்ளாராம்! செய்தி. (தலைவரே ஒண்ணும் அவசரமேயில்லை. நின்னு நிதானமா மார்ச் மாசம் கூட முடிவெடுக்கலாம். நீங்க நிக்கப்போற ஒத்த தொகுதிக்கு எதுக்கு இம்பூட்டு அவசரம்?ன்னு மக்கள் கேக்குறாய்ங்க.)

* பா.ஜ.க.வில் இருக்கும் சிலருக்கு என்னைப் பிடிக்காது. நான் கட்சியில் வளர்ந்து வருவதால் அவர்களுக்கு என்னைப் பிடிக்காது!  என்று நடிகை காயத்ரி ரகுராம் கூறியுள்ளார். (தாயீ இத நீ சொன்னா மோடியே சிரிச்சுடுவாரு. ஒரு நாளைக்கு எட்டு பேட்டி, நாலரை அறிக்கை கொடுக்குற தமிழிசை அக்காவாலேயே கட்சியில வளர முடியல. நீங்களெல்லாம்....விடுங்க விடுங்க பாஸ்.)