வேலூர் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் யாருக்கும்  ரஜினியின் ஆதரவு இல்லை என்று ரஜினியின் சகோதரர் சத்யநாராயணா தெரிவித்துள்ளார். 
வேலூர் நாடாளுமன்றத் தேர்தல் ஆகஸ்ட் 5 அன்று நடைபெறுகிறது. இத்தேர்தலில் திமுக சார்பில் கதிர் ஆனந்த், அதிமுக கூட்டணி சார்பில் ஏ.சி. சண்முகம் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர். நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி படுதோல்வி அடைந்த நிலையில், வேலூர் தொகுதியிலாவது வெற்றி பெற்று தங்கள் செல்வாக்கை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். எனவே வேலூர் தொகுதியில் ஏ.சி. சண்முகம் தரப்பில் ஜரூராக தேர்தல் பணிகள் நடைபெறுகின்றன.


இந்நிலையில் நாடாளுமன்றத் தேர்தலில் யாருக்கும் தன்னுடைய ஆதரவு இல்லை என்று தெரிவித்திருந்த ரஜினி, நதிநீர் இணைப்புக்கு திட்டம் வைத்திருக்கும் கட்சிகளுக்கு ஆதரவு அளியுங்கள் என்று தெரிவித்திருந்தார். தற்போது வேலூர் நாடாளுமன்றத் தேர்தலில் ரஜினியின் ஆதரவு யாருக்கு என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏ.சி. சண்முகமும் ரஜினியும் நீண்ட கால நண்பர்கள். சென்னை மதுரவாயலில்  தனக்கு சொந்தமான கல்லூரியில் எம்.ஜி.ஆர். சிலையைத் திறந்து வைத்து, அதிரடியான அரசியல் கருத்துகளைப் பேச ரஜினிக்கு மேடை அளித்து தந்தவர் ஏ.சி. சண்முகம்.


இந்த அடிப்படையில் வேலூரில் ரஜினி ரசிகர்கள் ஏ.சி. சண்முகத்துக்கு ஆதரவு தெரிவித்து, தேர்தல் பணிகளில் ஈடுபடுவதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், வேலூர் மாவத்தில் வாலாஜாபேட்டை அருகே பழமையான குளம் ஒன்றை ரஜினி மக்கள் மன்றம் சார்பில் தூர்வார முடிவு செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ரஜினியின் சகோதரர் சத்யநாராயணா பங்கேற்றார்.

 
அப்போது செய்தியாளர்கள் வேலூர் தேர்தலில் ரஜினி ஆதரவு குறித்து அவரிடம் கேள்வி எழுப்பினர். “வேலுார் நாடாளுமன்றத் தேர்தலில் அங்கே போட்டியிடும் எந்த வேட்பாளருக்கும் ரஜினியின் ஆதரவு இல்லை. விரைவில் ரஜினி அரசியல் பிரவேசம் செய்வார். ரஜினி கட்சி ஆரம்பித்த பிறகு பாஜவுடன் கூட்டணி அமைப்பதா இல்லையா என்பது குறித்தும் அவரே முடிவு செய்வார்” என்று தெரிவித்தார். ரஜினி சகோதரரின் இந்த அறிவிப்பால் வேலூரில் ரஜினி ரசிகர்கள் குழப்பத்தில் ஆழ்ந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.