சட்டமன்ற பொதுத்தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்கத் தயாராக இருப்பதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். 

ரஜினி மக்கள் மன்றத்தை  அவர் ஆரம்பித்து ஒன்றரை ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் விரைவில் கட்சியாக ஆரம்பிக்க போவதாக தெரிவித்து வருகிறார். இந்நிலையில் தங்களது கட்சி அடுத்து நடைபெற உள்ள சட்டமன்ற பொதுத்தேர்தலில் களமிறங்கும். மக்களவை தேர்தலில் போட்டியிட மாட்டேன் என அப்போதே அறிவித்து இருந்தார். இந்நிலையில் தண்ணீர் பிரச்னைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கட்சிக்கே தனது ரசிகர்கள் மக்களவை தேர்தலில் ஆதரவு அளிப்பார்கள் எனத் தெரிவித்து இருந்தார். 

ஆனால் ரஜினி மக்களவை தேர்தலை புறக்கணித்ததும், கட்சியை தொடங்காமல் இருப்பதும் அவரது ரசிகர்களிடையே ஏமாற்றத்தை அளித்து வருகிறது. இந்நிலையில் வாக்குப்பதிவு நாளான நேற்று அவரது ரசிகர்கள் சிலர் ‘அடுத்த ஓட்டு ரஜினிக்கே’’ என பதிவு செய்திருந்தனர். இந்நிலையில் தர்பார் படப்பிடிப்பிற்காக மும்பை செல்வதற்கு முன் செய்தியாளர்களை சந்தித்த அவர், ’’ ரசிகர்களின் அரசியல் ஆர்வம் புரிகிறது. அவர்களை ஏமாற்ற மாட்டேன். சட்டப்பேரவை பொதுத்தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்கத் தயாராக இருக்கிறேன். மோடி பிரதமராவாரா? என்பது மே 23ம் தேதி தெரிந்து விடும். 70 சதவிகித வாக்குப்பதிவு என்பது நல்ல வாக்குப்பதிவு தான். 

சென்னையில் மட்டும் 55 சதவிகித வாக்குப்பதிவாகி உள்ளது. காரணம், தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளதால் பெரும்பாலானோர் சொந்த ஊர்களுக்கு கிளம்பி போயிருப்பார்கள் என நினைக்கிறேன். ரசிகர்களை ஏமாற்ற மாட்டேன்’’ என அவர் தெரிவித்தார்.