rajini will introduce his party symbol on pongal day

2018ம் ஆண்டின் துவக்க நாள் அதிரடியாக, ஆன்மிக அரசியல் களம் காண இறங்கப் போவதாக அறிவித்துள்ள ரஜினி காந்த், வரும் பொங்கல் திருநாள் அன்று கட்சிச் சின்னத்தை அறிமுகப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப் படுகிறது. 

ரஜினி காந்த் அரசியலுக்கு வருவேன், கட்டாயம் வருவேன், இது காலத்தின் கட்டாயம் என்று கூறியதைக் காட்டிலும், அவரது ஆன்மிக அரசியல் என்ற அறிவிப்பு தான் எதிர்ப்பாளர்கள் பிடித்துக் கொண்ட ஒரே வார்த்தை. அதை வைத்துதான் ரஜினியை விமர்சனம் செய்து வருகின்றனர் பலரும். குறிப்பாக, ரஜினியின் அரசியல் பிரவேச அறிவிப்பால், தமிழக அரசியல் கட்சிகள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளன.

அடுத்து என்ன செய்வது என அரசியல் கட்சிகள் யோசித்து வரும் நிலையில், 'ரஜினி தமிழர் இல்லை; கன்னடர், மராட்டியர்' என மண்ணின் மைந்தர் பிரசாரம் செய்ய உதிரிக் கட்சிகளை பெரிய கட்சிகள் தூண்டி விடுகின்றன என்று கூறப் படுகிறது. அதனால்தான், நேற்று ஒரே நாளில் சமூக வலைதளங்களில் இந்த பிரசாரம் அதிகரித்துக் காணப்பட்டது.

ஏற்கெனவே எம்.ஜி.ஆரை மலையாளி என்று கட்டம் கட்டிப் பிரசாரம் செய்தும், தமிழக மக்கள் அதைப் பெரிதாகக் கருதவில்லை என்பதால், ரஜினி விஷயத்திலும் அப்படி எதுவும் ஆகிவிடக் கூடாது என்று பெரிய கட்சிகள் கவனத்துடன் இருக்கின்றன. கடும் எதிர்ப்பே கூட மக்கள் மனத்தில் மாற்றத்தைக் கொண்டு வந்து விடும் என்பதால், அடுத்த கட்ட தாக்குதலைத் தொடுப்பது குறித்து யோசித்து வருகின்றன. 

இந்நிலையில், தமிழர் என்ற ஆயுதத்தையே தாங்களும் எடுக்க ரஜினி மன்ற நிர்வாகிகள் யோசித்து வருகின்றனர். அதனால், வரும் தைத் திருநாளான தமிழர் திருநாள் அன்று, புதிய கட்சி சின்னத்தை அறிமுகப் படுத்தி, தமிழர் சார்ந்த ஆன்மிக அரசியல் களத்தை முன்னிறுத்த வேண்டும் என்று கோரி வருகின்றனர். எனவே, பொங்கல் பண்டிகையை சிறப்பாகக் கொண்டாடவும், தமிழர் திருநாளில் கட்சிச் சின்னம் அறிமுகம் செய்யப் படவும் வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.