பாஜகவை போலவே ஒரு திட்டம் ரஜினி மனதில் இருக்கலாம். அதைத்தான் அவர் வெளிப்படுத்தியுள்ளார் என்று பாஜக மூத்த தலைவர் இல. கணேசன் தெரிவித்துள்ளார்.
 ‘நான் முதல்வராக மாட்டேன்; கட்சி தனி; ஆட்சி தனி; இளைஞர்களுக்கு வாய்ப்பு’ என ரஜினி அளித்த பேட்டி தமிழக அரசியல் கட்சியினர் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றி பலரும் கருத்து தெரிவித்துவருகிறார்கள். இந்நிலையில் புதுச்சேரி வந்த பாஜக மூத்த தலைவர் இல.கணேசன், ரஜினி பேட்டி பற்றி கருத்து தெரிவித்தார். “பாஜகவில் அமைப்புக்கென ஒரு பிரிவு உள்ளது. கட்சிக்கென ஒரு பிரிவு உள்ளது. நான் கட்சியின் அமைப்பிலிருந்து வந்தவன். இந்தத் திட்டத்தின்படிதான் பாஜக செயல்பட்டு வருகிறது.


இதுபோன்ற ஒரு திட்டம் ரஜினி மனதில் இருக்கலாம். அதைத்தான் அவர் வெளிப்படுத்தியுள்ளார். ஆனால், அது எதுவாக இருந்தாலும் அவர் கட்சி தொடங்கிய பிறகுதான், எப்படி செயல்படுகிறது என்பதைப் பார்க்க முடியும். உண்மையில் இதுபோல் ஒரு திட்டம் இருக்குமானால் அது நல்லதும்கூட. கட்சியில் அமைப்பு ரீதியாகப் பணி செய்பவர்கள் சமுதாயத்தில் பெரிதாக விளம்பரத்தை விரும்ப மாட்டார்கள். ஆட்சிக்கு வர வேண்டும் என விரும்புபவர்கள்தான் பிரபலம் அடைவார்கள்.
ரஜினி விஷயத்தில் இங்கு  ரஜினிதான் எல்லாம். அவர் மிக அதிகமாக பிரபலமாகி இருக்கிறார். என்றாலும், நல்ல எண்ணத்தில் ஏதோ சொல்லியிருக்கிறார். அது எப்படி அமலாகி, எப்படி போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். முதலில் ரஜினி கட்சி தொடங்கட்டும். அதன் பிறகுதான் இவை எல்லாம் மக்களுக்கு புரியும்” என்று இல. கணேசன் தெரிவித்தார்.