தமிழக அரசியலில் அதிசயம் நடக்கும் என்று கமல் பாராட்டு விழாவில் ரஜினி சூசகமாகப் பேசியிருக்கிறார்.


அரசியலுக்கு வருவதாகவும் சட்டப்பேரவைத் தேர்தலில் தன்னுடைய படையும் இருக்கும் என்று நடிகர் ரஜினி அறிவித்து 2 ஆண்டுகள் ஆகிவிட்டன. அதற்கான பணிகள் நடைபெற்றுதாகக் கூறப்படும் நிலையில், ரஜினி தொடர்ந்து சினிமாவில் நடித்துவருவதால் அவருடைய ரசிகர்கள் சோர்ந்துபோய்விட்டார்கள். மேலும் தொடர்ந்து தமிழக அரசியலில் நல்ல ஆளுமையான தலைமைக்கு வெற்றிடம் உள்ளது என்றும் ரஜினி அவ்வப்போது பேசிவருகிறார். ரஜினியின் பேச்சுக்கு திமுக, அதிமுகவிடமிருந்து இதற்கு பதிலடி தரப்பட்டு வருகின்றன.


 இந்நிலையில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசனின் பிறந்தநாள் விழா மற்றும் அவரது 60 ஆண்டு கால சினிமா கலை பயணத்தை கொண்டாடும் வகையில் சென்னையில்‘உங்கள் நான்’ எனும் பெயரில் பிரம்மாண்ட நிகழ்ச்சி நடைபெற்றது. 

இந்த நிகழ்ச்சியில் பேசிய ரஜினி, ‘இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு முதல்-அமைச்சர் ஆவோம்’ என்று எடப்பாடி பழனிசாமி கனவில்கூட நினைத்திருக்க மாட்டார். ஆனால், அவர் முதல்வரானார். அப்படியே முதல்வரானாலும் 60 நாட்களில் ஆட்சி கவிழ்ந்துவிடும். 4 மாதங்கள்கூட தாங்காது என்று சொல்லாதவர்களே கிடையாது. 95 சதவீதம் பேர் இதைத்தான் சொன்னார்கள். ஆனால், அதிசயம் நடந்தது. அற்புதம் நடந்தது. ஆட்சி கவிழவில்லை. இன்றும் தொடர்ந்துகொண்டிருக்கிறது.  நேற்று ஒரு அதிசயம் நடந்ததுபோல, இன்றும் அதிசயம் நிகழ்கிறது. நாளையும் அதிசயம் நிகழும்” என்று அரசியலை மனதில் வைத்து பேசினார். 
எடப்பாடி முதல்வராக தொடர்வது அதிசயம் கிடையாது. ஆட்சியைச் செலுத்தும் அளவுக்கு எண்ணிக்கை தேவை. அந்த எண்ணிக்கை அதிமுகவிடமும் எடப்பாடியிடமும் உள்ளது. அதனால்தான், அவர் ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ள முடிந்தது. மெஜாரிட்டி இல்லாவிட்டால், இங்கே யாரும் ஆட்சியைப் பற்றி கனவில்கூட நினைத்துப் பார்க்க முடியாது. எடப்பாடி பழனிச்சாமி முதல்வரானதைப்போல ரஜினி முதல்வர் ஆக வேண்டும் என்றால், அவர் முதலில் கட்சி தொடங்க வேண்டும். பிறகு தேர்தலில் குறைந்தபட்சம் 118 எம்.எல்.ஏ.க்களைப் பெற வேண்டும் என்பதே யதார்த்தம்!