சட்டமன்றத் தேர்தல் வரும் வரை காத்திருந்தாள் ரஜினி அரசியலுக்கு வந்து புதிய நெருக்கடியை ஏற்படுத்துவார் என்று ஸ்டாலின் திமுக நிர்வாகிகள் சிலர் பீதி கிளப்பி வருகின்றனர்.

நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்பார்த்த முடிவு கிடைத்த நிலையிலும் சட்டமன்ற இடைத்தேர்தலில் 13 தொகுதிகளுக்கு மேல் வெல்ல முடியாத அதிர்ச்சியில் ஸ்டாலின் கடந்த சில நாட்களாக மன இறுக்கத்திலேயே இருந்துள்ளார். மேலும் அதிமுக தரப்பிலிருந்து எம்எல்ஏக்கள் திமுக பக்கம் வர பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை. தினகரன் ஆதரவாளர்களாக இருந்த எம்எல்ஏக்கள் இரண்டு பேரும் மீண்டும் எடப்பாடி வசம் இணைந்து விட்டனர். இதனால் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்து எடப்பாடி அரசை கணிப்பது சிரமம் என்று ஸ்டாலின் கருதினார். 

இதன் வெளிப்பாடாகவே நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரும் விவகாரத்தில் அவசரம் காட்டாமல் ஸ்டாலின் நிதானத்தைக் கடைப்பிடித்தார். மேலும் அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் சட்டப்பேரவைத் தேர்தல் வரவுள்ள நிலையில் தற்போது ஆட்சியை கலைக்க வேண்டிய அவசியம் இல்லை என்கிற ரீதியில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஸ்டாலின் பேசியிருந்தார். அதிமுக அரசு தானாக விழும் வரை காத்து இருக்கலாம் என்றும் அவர் கூறியிருந்தார். 

இதனால் எடப்பாடி அரசை கவிழ்க்கும் முயற்சி மு.க. ஸ்டாலின் பின்வாங்கி விட்டதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் திமுக தலைவர் கலைஞர் பிறந்தநாள் விழாவில் பேசிய ஸ்டாலின் தமிழக அரசியலில் பெரும் வெற்றிடம் இருப்பதாக சிலர் பேசி வருகின்றனர் அந்த வெற்றிடத்தை நிரப்ப தான் நான் இருக்கிறேன் என்று கூறியிருந்தார். அதாவது கடந்த ஆண்டு சென்னை ஏசிஎஸ் கல்லூரி விழாவில் பேசிய ரஜினிகாந்த், தமிழக அரசியலில் வெற்றிடம் இருப்பதாக தெரிவித்திருந்தார். 

அதனை நினைவில் வைத்துக்கொண்டே ரஜினிக்கு தற்போது ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளதாக சொல்லப்பட்டது. இதற்கான பின்னணியை விசாரித்தபோது, ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியை ஸ்டாலின் கைவிட்டுவிட்டதாக பேசப்பட்டதை திமுக நிர்வாகிகள் சிலர் விரும்பவில்லை என்கிறார்கள். இன்னும் இரண்டு ஆண்டுகள் பொறுத்திருந்தால் அதற்குள் ரஜினி கட்சி ஆரம்பித்து விடுவார் பிறகு தேர்தலில் அவரையும் எதிர்த்து அரசியல் செய்ய வேண்டிய சூழல் ஏற்படும். எனவே ரஜினி பார்பதற்கு முன் தேர்தலை நடத்தி முடிப்பது தான் திமுகவிற்கு நலமென்று முக்கிய நிர்வாகிகள் ஸ்டாலினிடம் கூறியுள்ளனர். 

இதனையடுத்து மீண்டும் அதிமுக எம்எல்ஏக்களை திமுக நிர்வாகிகள் மூலமாக ஸ்டாலின் அணுக ஆரம்பித்துள்ளதாகவும், இதனை அறிந்தே எடப்பாடி பழனிசாமி கடந்த 2 நாட்களாக எம்எல்ஏக்களுடன் தானே தொடர்பு கொண்டு பேசி வருவதாகவும் சொல்லிக் கொள்கிறார்கள்.