rajini missing from intelligence tracking
ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் குறித்து அறிந்துகொள்ள உளவுத்துறை ரஜினியை கண்காணிக்கிறது. அதை அறிந்த ரஜினிகாந்த், உளவுத்துறையின் கண்களில் மண்ணை தூவிவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ரஜினியின் அரசியல் பிரவேசத்தை அவரது ரசிகர்கள் எதிர்நோக்கி காத்திருந்தனர். கடந்த டிசம்பர் மாதம் 31ம் தேதி அரசியல் பிரவேசத்தை உறுதி செய்த ரஜினிகாந்த், கட்சி தொடங்கும் பணிகளில் மும்முரமாக செயல்பட்டுவருவதாக கூறப்படுகிறது.

ரஜினியின் அடுத்தடுத்த அரசியல் நகர்வுகளை கண்காணிக்கும் அசைன்மெண்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதையடுத்து ரஜினியின் போயஸ் கார்டன் இல்லத்தை உளவுத்துறை தீவிரமாக கண்காணித்துவருகிறது. அதனால் அரசியல் ஆலோசனைகளை ராகவேந்திரா மண்டபத்திலும் கேளம்பாக்கம் பண்ணை வீட்டிலும் நடத்தி வந்தார் ரஜினி.

ஆனால் அங்கும் உளவுத்துறை கண்காணிப்பைத் தொடங்க, ரஜினி புது வியூகத்தை கையாண்டு வருவதாக கூறப்படுகிறது. எந்த ஆலோசனையையும் வீட்டிலோ மண்டபத்திலோ மேற்கொள்வதில்லையாம். எல்லாமே காரில்தானாம். யாருடன் ஆலோசிப்பது என்றாலும் தனது காரில் ஏற்றிக்கொண்டு ஆலோசித்துவிட்டு பின்னர் வீட்டில் சென்று விட்டுவிடுகிறாராம்.

அதுவும் ஒரே கார் கிடையாதாம். வீட்டிலிருந்து ஒரு காரில் புறப்பட்டு, பின்னர் வேறு காரில் மாறி ஆலோசனையை முடித்துவிடுகிறாராம் ரஜினி. இதனால் உளவுத்துறையால் ரஜினியின் அடுத்தகட்ட அரசியல் தொடர்பான ஆலோசனைகளை அறிந்துகொள்ள முடியவில்லை என கூறப்படுகிறது.
