நடிகர் ரஜினிகாந்த் புதிய கட்சி தொடர்பான அறிவிப்பை டிசம்பர் 31ம் தேதி வெளியிட உள்ளார். ரஜினி மக்கள் மன்றத்துக்கு ஏற்கனவே பூத் கமிட்டிகள் அமைக்கப்பட்ட நிலையில், அதுதொடர்பான இறுதிப் பணிகள் மும்மரமாக நடைபெற்றுவருகின்றன. அந்த பணிகளை ஒருங்கிணைப்பாளர் அர்ஜூனமூர்த்தி, மேற்பார்வையாளர் தமிழருவி மணியன் ஆகியோர் ஒருங்கிணைத்து வருகிறார்கள். தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில் மதுரையில் பூத் கமிட்டி உறுப்பினர்களின் விவரங்களை சரிபார்த்தபோது, பலரது பெயர்கள் முறைகேடாக சேர்க்கப்பட்டுள்ளது வெளிச்சத்துக்கு  வந்துள்ளது.


குறிப்பாக பூத் கமிட்டி உறுப்பினர்களாக சேர்க்கப்பட்ட பலருக்கும்  பூத் கமிட்டியில் இருப்பதே தெரியவில்லை. பலரும் அவர்களுடைய விருப்பம் இல்லாமல் பூத் கமிட்டியில் சேர்க்கப்பட்டுள்ளதும் தெரிய வந்தது. இந்நிலையில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் சிலர், ஒருவரை செல்போனில் தொடர்புகொண்டு உரையாடிய ஆடியோ பதிவும் வெளியாகி உள்ளது. அந்த ஆடியோவில் பேசியவர்களும்  ரஜினி கட்சியின் பூத் கமிட்டியில் இடம் பெற்றிருப்பது தெரிய வந்துள்ளது. 
இத்தனைக்கும் அவர்களுக்கு அதுதொடர்பாக எதுவும்  தெரியவில்லை. தங்களது பெயர், தொடர்பு எண் எப்படி கிடைத்தது என்றும் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளிடம் போனில் பேசியவர்கள் கேள்வி எழுப்பினர். இதுபோன்ற பல குழப்பங்கள் ரஜினி கட்சியின் பூத் கமிட்டியில் வெளியாகி இருப்பது ரஜினி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. எனவே, பிற மாவட்டங்களிலும் பூத் கமிட்டி குறித்து ஆய்வு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில், ரஜினி கட்சியில் பூத் கமிட்டி குளறுபடிகள் பரபரப்பை கிளப்பியுள்ளன.