’வருவேனா... வரமாட்டேனா...’ என பல ஆண்டுகளாக போக்குக் கூட்டி வந்த ரஜினி ’வரப்போவது உறுதி’ எனக் கூறிவிட்டு ஓராண்டு கடந்தும் வராமல் இருப்பதால் ரஜினி மக்கள் மன்றத்தினர் பெரும்பாலானோர் பிற கட்சிகளில் இணைவதற்கு தயாராகி வருகிறார்கள்.  

ரஜினியின் செயல்பாடுகளை திரும்பிப்பார்த்தால் பலமுறை ரஜினி அரசியல் ஆளுமைகளின் கருத்திற்கு, கண்டனத்திற்கு கட்டுப்பட்டிருக்கிறார். சிகரெட் பிரச்னையை பாமக கண்டித்ததற்கு பிறகு, சந்திரமுகி படத்தில் இருந்து புகை பொருட்களை பயன்படுத்தவில்லை. தன்னுடைய பெண் திருமணத்திற்கு வீடு தேடி சென்று ராமதாஸிற்கு பத்திரிகை வைத்து சமரசமானார். பாபா பாடத்தில் பெரியார், இராஜாஜி இருவரையும் ஒப்பிட்டு, பாடல் வரிகள் வரும். அந்த வரிகளை நீக்க வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கோரிக்கை வைத்தார். உடனே அவரை தொடர்பு கொண்டு மன்னிப்புக் கேட்டு, ஆடியோ கேசட்டில் தவிர்க்க முடியாது. ஆனால், திரைப்படத்தில் அந்த பாடல் வரி வராமல் பார்த்துக் கொள்கிறேன் என்று திராவிடர் கழகத் தலைவரிடம் வாக்குறுதி கொடுத்தார். உடனே,திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, தான் எழுதிய கீதையின் மறுபக்கம் என்கிற நூலை அவருக்கு அன்பளிப்பாக அளித்தார்.

கன்னடர் என்கிற விமர்சனம் வந்தபோது விடுதலைப் புலிகளையும், ஈழத்தமிழர்களையும் வானாளாவ புகழ்ந்து மேடையில் பேசினார். நடிகர் விவேக்கின் மதியுகத்தை வைத்து அவரை பிராமணன் என்றுதான் நினைத்தேன் என்று பேசியதற்கு தேவர் அமைப்புகள் மெலிதாக தங்கள் கண்டனத்தை பதிவு செய்தன. அதனையும் உடனடியாக உள்வாங்கி கொண்டார். இதே போல் வட்டாள் நாகராஜன், பால்தாக்கரே போன்றோரிடமும் பலமுறை சமதானமாகியிருக்கிறார்.

ரஜினி துணிச்சலாக எதிர்த்தவர் ஜெயலலிதா மட்டுமே. 1996 தேர்தல் சமயத்தில் மட்டுமே அந்த துணிகர சம்பவம் நடந்தது. அதன் பிறகு, ஜெயலலிதா ஆட்சியில் நடந்த பாராட்டு விழாவில் ஜெயலலிதாவிற்கு ட்ரிபிள் வி பட்டம் கொடுத்தார். அதாவது டிரிபிள்வி. அதன்பொருள் வீராணம், வீரப்பன், வெற்றி இதுதான் ஜெயலலிதா என்று புகழாரம் சூட்டினார்.

அதே 96 தேர்தலில் மனோரமா ரஜினிகாந்தை கடுமையாக எதிர்த்து பிரச்சாரம் செய்தார். அந்த தேர்தல் முடிந்ததும் ரஜினி தன்னுடைய அருணாச்சலம் படத்தில் மனோரமாவிற்கு வாய்ப்பு தந்து மரியாதை செய்தார். திருமாவளவன், வேல்முருகன் வேண்டுகோளுக்கு மரியாதை கொடுத்து ரஜினி இலங்கை பயணத்தை ரத்து செய்தார். திமுகவின் முரசொலி நாளேடு அவரது அரசியல் வருகை குறித்து  ப்ளாக்‌ஷி மே என்ற தலைப்பில் காட்டமான ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தது. மோடியை பலசாலி எனக் கூறிவிட்டு ஐந்து மாநில தேர்தலுக்கு பிறகு பாஜகவுக்கு பின்னடைவு என டைவ் அடித்தார். 

அவற்றையெல்லாம் மறந்து விடலாம். கட்சி ஆரம்பிக்கப்போகிறேன் என அவர் சொல்லி ஓராண்டுகளுக்கு மேலாகி விட்டது. ரஜினி ரசிகர் மன்றம், ரஜினி மக்கள் மன்றம் ஆகியது மட்டுமே இந்த ஓராண்டில் நடந்த சாதனை. வழக்கமாக இரண்டாண்டுகளுக்கு ஒரு படமோ அல்ல மூன்றாண்டுக்கு ஒரு படமோ நடிக்கும் அவர், கட்சி ஆரம்பிக்கப்போவதாக கூறியபின் ஆண்டுக்கு முன்ன்று படங்களுக்கு மேல் நடிக்கத் தொடங்கி விட்டார். இப்போது டிவி ஆரம்பிக்கப்போவதாக கூறியுள்ள ரஜினி இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு பிறகு அந்தப் பணியை தொடங்கப்போகிறாரோ? அது பாபாவுக்கே வெளிச்சம். ஒன்றை மட்டும் புரிந்து கொள்ளுங்கள். சூப்பர் ஸ்டார்கள் யாரையும் பகைத்துக் கொள்ள மாட்டார்கள். அப்படி பகைத்துக் கொண்டால் அவர்கள் சூப்பர் ஸ்டாராக இருக்க முடியாது. ஆகையால் அவர் அரசியலுக்கு வருவது சந்தேகம் என்கிறார்கள் அவரது ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் சிலர். 

‘’கட்சி ஆரம்பிக்கப்போவதாக கூறி ஆண்டுக்கணக்கில் ஆகிவிட்ட நிலையில் இப்போது டிவி சேனல் ஆரம்பிக்கப்போவதாக கூறுகிறார். இதற்கெல்லாம் பின்னணி இருக்கிறது. அவர் நடித்து வெளிவந்த காலா, 2.0 ஆகிய படங்கள் சரியான அளவில் வசூலை ஈட்டவில்லை. அடுத்து பேட்ட படம் வெளிவர இருக்கிறது. கட்சியை அறிவிக்காததால் சோர்வில் உள்ள அவரது ரசிகர்களை உற்சாகப் படுத்தவே டிவி சானல் ஆரம்பிக்கப்போவதாக அறிவித்துள்ளார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க உள்ள அடுத்த படம் ரிலீசாகும் வரை இப்படி ஏதாவது ஒரு அறிவிப்பை வெளியிட்டு ரசிகர்களை கைக்குள் வைத்துக் கொள்ளும் திட்டம்தான் இவையெல்லாம். உண்மையில் அவர் கட்சியையும், டி.வி.சானலையும் ஆரம்பிப்பாரா என்பது சந்தேகமே. 

 ரஜினி மக்கள் மன்றத்தில் இருக்கும் சில நிர்வாகிகள் ஏற்கெனவே குழப்பத்தில் இருந்து வந்தார்கள். தேர்தல் நெருங்கி வரும் வேளையில் வேறு கட்சிகளில் இணைந்து விடலாம் என்கிற முடிவுக்கு பெரும்பாலானோர் வந்து விட்டனர். உடனடியாக ரஜினி கட்சியை அறிவிக்கவில்லை எனில் அவரது மக்கள் மன்றம் மொத்தமாக காலியாகி விடும்’’ என்கின்றனர் அவரது ரசிகர் மன்றத்தை சேர்ந்த அதிருப்தியாளர்கள்.