ரஜினி கமல் இணைந்து... படம் நடித்தால் நல்லா இருக்கும்..! கருத்துக்களை தாறுமாறாக பறக்கவிட்ட அரசியல் புள்ளி..! 

தீபாவளி பண்டிகையின்போது டாஸ்மாக் விற்பனைக்கு இலக்கு நிர்ணயித்த தமிழக அரசு உரம் கையிருப்பில் வைக்க நிர்ணயிக்கவில்லை என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் நடந்த விழா ஒன்றிற்கு பிறகு பேட்டியளித்த முத்தரசன் பல்வேறு கருத்துக்களை வெளிப்படுத்தி இருந்தார். கடந்த மூன்று ஆண்டுகளாகவே உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாமல் இருப்பதால் மின்சாரம், குடிநீர், விநியோகம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டு ஒரு தீர்வு கிடைக்காமல் இருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் பல்வேறு ஊழல்களும் ஏற்பட்டுள்ளது.

பேரூராட்சி தலைவர், நகரசபை தலைவர், மேயர் ஆகிய பதவிகளுக்கு எந்த ஒரு காரணத்தை கொண்டும் மறைமுகத் தேர்தல் நடத்தக்கூடாது. இது ஜனநாயக விரோத செயல்களுக்கு வழிவகுக்கக் கூடியது. மறைமுக தேர்தல் நடத்த கவர்னர் கண்டிப்பாக ஒப்புதல் அளிக்கவும் கூடாது. ஏற்கனவே சொத்துவரி உயர்த்தப்பட்ட நிலையில் உள்ளாட்சித் தேர்தலை கருத்தில் கொண்டு தற்போது புதிய சொத்து வரி நிறுத்தி வைத்துவிட்டு, ஏற்கனவே அமலில் இருந்த அதாவது 2018 ஏப்ரல்1ஆம் தேதிக்கு முன்னதாக நடைமுறையில் இருந்த அதே சொத்துவரியை செலுத்தினால் போதும்; புதிய சொத்து வரி முறை தற்போது நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. மேலும் யாரெல்லாம் புதிய சொத்து வரி விதிகளின்படி வரி செலுத்தி இருக்கிறார்களோ அடுத்தடுத்து வரும் காலங்களில் அதனை சமன் செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது 

இது அனைத்துமே உள்ளாட்சித் தேர்தலை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட முடிவு. தற்போது டெல்டா பகுதிகளில் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகை வரும் போது டாஸ்மாக் விற்பனை செய்ய அரசு ஓர் இலக்கு நிர்ணயித்து இருந்தது. ஆனால் உரம் கையிருப்பில் வைக்க எந்த ஒரு இலக்கும் நிர்ணயிக்கவில்லை. சொல்லப்போனால் டாஸ்மாக்கில் காட்டிய ஆர்வத்தை உரம் விற்பனையில் அரசு காட்டவில்லை.

விவசாயிகள் எந்த விதத்திலும் பாதிக்காத வண்ணம் உரம் தட்டுப்பாடு இன்றி அவர்களுக்கு கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ரஜினிகாந்த் கமல்ஹாசன் பற்றி சொல்ல வேண்டும் என்றால், அவர்கள் அரசியலில் இணைந்து செயல்படுவதை விட இருவரும் ஒன்றாக சேர்ந்து நடித்தால் நன்றாக இருக்கும் என முத்தரசன் அதிரடியாக கருத்து தெரிவித்து அவருடைய உரையை முடித்துக்கொண்டார்.