விரைவில் அரசியலுக்கு வர உள்ள நடிகர் ரஜினிகாந்தை தமிழக அமைச்சர் ஆர்.பி உதயகுமார் புகழ்ந்து தள்ளியிருப்பது ரஜினி ரசிகர்களையே ஆச்சரியப்பட வைத்துள்ளது.

சிஸ்டம் சரியில்லை என்று கூறி அரசியலுக்கு வர உள்ள ரஜினி அவ்வப்போது தமிழக அரசின் சில திட்டங்களையும் பாராட்டி வருகிறார். எதற்கெடுத்தாலும் போராட்டம் கூடாது என்கிற ரஜினியின் பேட்டியை அ.தி.மு.கவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மா புகழ்ந்து தள்ளியது. தொடர்ந்து தமிழக கல்வித்துறை மற்ற மாநிலங்களை காட்டிலும் மிகச்சிறப்பாக உள்ளதாக ரஜினி பேட்டி அளித்தார்.

ரஜினியின் இந்த பேட்டிக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நன்றி தெரிவித்தார். மேலும் அனைத்து தொலைக்காட்சிகளையும் செங்கோட்டையனே தொடர்பு கொண்டு ரஜினிக்கு தான் நன்றி சொன்னதை ஒளிபரப்புமாறு கேட்டுக் கொண்டார். இந்த நிலையில் தான் ரஜினி, சென்னை – சேலம் பசுமை வழிச்சாலை திட்டத்திற்கு ஆதரவாகவும் பேசினார்.

அ.தி.மு.க – பா.ஜ.க தவிர அனைத்து கட்சிகளும் எதிர்க்கும் ஒரு திட்டத்தை ரஜினி ஆதரித்த உடன் தமிழக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமாருக்கு தலைகால் புரியவில்லை. ரஜினி ஆதரித்ததால் இனி பசுமை வழிச்சாலை திட்டம் சூப்பர் ஸ்டார் திட்டம் என்றெல்லாம் உணர்ச்சிவசப்பட்டு உதயகுமார் பேசியிருந்தார். இந்த நிலையில் மதுரை மாவட்டம் முழுவதும் தமிழக அரசின் சாதனைகளை விளக்கி உதயகுமார் சைக்கிள் பயணம் மேற்கொண்டு வருகிறார்.

அந்த வகையில், மதுரை பேரையூருக்கு உதயகுமாரின் சைக்கிள் பேரணி வந்தது. அங்கு செய்தியாளர்களிடம் பேசிய உதயகுமார், ரஜினி போன்ற நல்லவர்கள் நல்லவிதமாக எங்கள் திட்டங்களை பேசி வருகின்றனர். இதன் மூலம் எங்கள் ஆட்சிக்கும் கட்சிக்கும் நல்ல பெயர் கிடைத்துள்ளது. ரஜினி ஒரு மாபெரும் மனிதர். அவர் நல்லவர், வல்லவர், நாலும் தெரிந்தவர். அவர் பசுமை வழிச்சாலை திட்டத்தை பாராட்டியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்வாறு உதயகுமார் கூறினார்.

ரஜினியை அ.தி.மு.க அமைச்சர் ஒருவர் இந்த அளவிற்கு புகழ்ந்துள்ளது ரஜினி ரசிகர்களையே ஆச்சரியப்பட வைத்துள்ளது.