கன்னட நடிகரும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான மறைந்த அம்பரீஷ் மனைவியான நடிகை சுமலதா நாடாளுமன்ற தேர்தலில் மாண்டியா தொகுதியில் போட்டியிட விரும்பினார். ஆனால் மாண்டியா தொகுதியை காங்கிரஸ் கூட்டணியில் உள்ள முதலமைச்சர் குமாரசாமி கட்சியான ஜே.டி.எஸ். கட்சிக்கு ஒதுக்கப்பட்டது.

மாண்டியா தொகுதியில் குமாரசாமியின் மகன் நிகில் போட்டியிடுகிறார். இதனால் சுமலதாவிடம் வேறு தொகுதியில் போட்டியிடுமாறு சித்தராமையா உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள், நிர்வாகிகள் கோரிக்கை விடுத்தும் அதை சுமலதா ஏற்கவில்லை.

இதையடுத்து மாண்டியா தொகுதியில் சுமலதா சுயேட்சையாக களம் இறங்கினார். அவர் தனது மகனுடன் சென்று தொகுதி முழுக்க ஆதரவு திரட்டினார். 
இந்நிலையில் மாண்டியா தொகுதியில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. அதில் குமாரசாமியின் மகன் நிகில் குமாரசாமி முன்னிலையில் இருந்தார். ஆனால் நேரம் செல்ல செல்ல, நடிகை சுமலதா முன்னிலை பெற்றார்.

தற்போது அவர் நிகில் குமாரசாமியைவிட, 1, 26, 436 வாக்குள் கூடுதலாகப் பெற்று முன்னிலை பெற்றுள்ளார். கிட்டத்தட்ட அவரது வெற்றி உறுதியாகியுள்ளது. இந்த தொகுதியில் சுமலாதாவுக்கு பாஜக ஆதரவு அளித்தது குறிப்பிடத்ததக்கது.