உள்ளாட்சித் தேர்தலில் ரஜினியின் உத்தரவை மீறி தேர்தலில் போட்டியிடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்ப்படும் என்று ரஜினி மக்கள் மன்றம் அறிவித்துள்ளது.
அரசியலுக்கு வர ஆயத்தமாகிவிட்ட நடிகர் ரஜினி, 2021 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக கட்சித் தொடங்க உத்தேசித்துள்ளார். இந்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் வந்தபோது யாருக்கும்  தன்னுடைய ஆதரவு இல்லை என்று அறிவித்தார். இதேபோல தற்போது தமிழகத்தில் ஊரக உள்ளாட்சிகளுக்குத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், உள்ளாட்சித் தேர்தலிலும் யாருக்கும் ஆதரவு இல்லை, தன் பெயர், மன்றத்தின் கொடி, சின்னத்தை யாரும் பயன்படுத்தக் கூடாது என்றும் ரஜினி தெரிவித்துள்ளார். இதை மீறி யாராவது பயன்படுத்தினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் ரஜினி சார்பில் மன்ற செயலாளர் சுதாகர் எச்சரித்திருந்தார்.
ரஜினியின் இந்த அறிவிப்பு ரஜினி ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. உள்ளாட்சித் தேர்தல் என்பது அந்தந்தப் பகுதியில் செல்வாக்காக இருப்போர்கூட கட்சிகளைத் தாண்டி வெற்றி பெறும் வாய்ப்பு உள்ளது. எனவே, ரஜினி ரசிகர்கள் பலரும் தேர்தலில் போட்டியிட ஆர்வம் காட்டிவருகிறார்கள். திருச்சி மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலில் சுயேட்சையாகப் போட்டியிட ரஜினி ரசிகர்கள் திட்டமிட்டிருந்த நிலையில், அந்த மாவட்ட செயலாளர் கலீல் தேர்தலில் ரஜினி ரசிகர்கள் போட்டியிட தடை விதித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.


அதில், “உள்ளாட்சி தேர்தலில் ரஜினியின் ஆதரவு யாருக்கும் இல்லை.  ரஜினி மக்கள் மன்றம், ரசிகர் மன்றத்தின் பெயரில் யாராவது ஓட்டு கேட்டால், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில செயலாளர் சுதாகர் அறிவித்திருந்தார். எனவே திருச்சி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் மன்றத்தை சேர்ந்த யாரும் போட்டியிட கூடாது. யாருக்கும் ஆதரவாக ஓட்டு கேட்கவும் கூடாது. இதை மீறினால் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.” என்று கலீல் தெரிவித்துள்ளார்.