காங்கிரஸ் கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட கராத்தே தியாகரானன் மீண்டும் அக்கட்சிக்குள் போகும் எண்ணத்தை கைவிட்டுவிட்டார். அவரது ஒரே டார்கெட், ரஜினி துவங்க இருப்பதாக சொல்லிக் கொண்(டே)டிருக்கும் புதிய கட்சிதான். மேலும் ரஜினியின் நண்பரும் கூட கராத்தே என்பதாலும் இந்த எண்ணம். அதனால் அடிக்கடி ரஜினி கட்சி பற்றி பேசுவது, ‘கருணாநிதி, ஜெயலலிதாவின் இடத்தை நிரப்ப ரஜினியால்தான் முடியும்.’ என்று ட்விட் போடுவது போன்ற காரியங்களைப் பண்ணிக் கொண்டிருக்கிறார் மனிதர்.


 
இந்த நிலையில் சமீபத்தில் சென்னை பெசன்ட் நகரில் தேவாலய திருவிழா ஒன்று நடந்தது. அதில் ரஜினி மக்கள் மன்றம் சார்பாக அன்னதானம் வழங்கியிருக்கிறார்கள். இந்த நிகழ்வில் கலந்து கொண்ட கராத்தேவுக்கு ரஜினி மன்றத்தினர் சிலர் சால்வை போட்டுள்ளனர். ஆனால் மன்ற விதிப்படி இப்படி கூட்டங்களில் சால்வையெல்லாம் போடக்கூடாதாம் (ஓ! சூப்பரப்பு). எனவே மாவட்ட செயலாளரான அசோக் ‘விதியை மீறி ஏன்யா சால்வை போடுறீங்க?’ என்று கராத்தேயின் கண் எதிரிலேயே கட்சியினரை திட்டி அனுப்பிவிட்டார். இது ஒரு வித பரபரப்பை பற்றவைத்துள்ளது.

இந்த நிலையில் கராத்தே தங்கள் தலைவர் துவங்க இருக்கும் கட்சிக்குள் வர முயல்வதை பற்றிப் பேசும் ரஜினி மன்ற நிர்வாகிகள் பலர் “தலைவர் கட்சி துவங்கினதும் இந்த கராத்தே தியாகராஜன் நுழைய பார்க்கிறார். இவர் ஏற்கனவே அ.தி.மு.க., காங்கிரஸுன்னு சில கட்சிகள்ள இருந்தவர், அதிருப்தியால்தான் வெளியேறினார். அதிலும் காங்கிரஸில் சஸ்பெண்டே பண்ணியிருக்காங்க. 
எங்க தலைவரோட அரசியலோ மாற்றத்துக்கானது (அது இன்னாதான் மாற்றம்யா?), அதுல இவர் மாதிரியான ஆளுங்கோ சேர்ந்தா இன்னாவுறது. அதனால அவரை எங்க கட்சிக்குள் விடமாட்டோம். தன்னோட நண்பர் அப்படிங்கிற அடிப்படையில் தலைவரே பதவி கொடுத்தாலும் கூட அவர்கிட்ட நியாயத்தை கேட்டு, இவரை நீக்க வைப்போம். என்ன ஆனாலும் சரி.” என்கின்றனர். 

ஆனால் கராத்தேவுக்கு சால்வை போட்டவர்கள் போல் சிலரோ ‘அவர் வரணும். இப்படியான அனுபவஸ்தர்கள் வந்தால்தான் கட்சியை கொண்டு போக முடியும்.’ என்று எதிர் கருத்தை தட்டிவிடுகின்றனர். ஆக கராத்தேவால் ரஜினி மன்றத்துக்குள் பெரும் ஃபைட் துவங்கியுள்ளது. 

வாவ்! தான் கட்சி துவங்குவதை இன்னும் சில வருடங்களுக்கு தள்ளிப்போட செம்ம காரணமொன்று ரஜினிக்கு கிடைச்சுடுச்சுன்னு சொல்லுங்க.