தஞ்சையில் நடைபெற உள்ள ஆன்மீக் அரசியல் மாநாட்டுக்கு நடிகர் ரஜினிகாந்தையும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலினை அழைக்கவும் முடிவு செய்திருப்பதாக இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார்.


இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் கும்பகோணத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். “மத்திய அரசு அமல்படுத்தியுள்ள குடியுரிமை சட்ட திருத்தத்தை தமிழக மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ஆனால், அந்த சட்டத்துக்கு  தமிழகத்தில்  எதிர்ப்பு இருப்பதுபோல ஒரு தோற்றத்தை சிலர் முயற்சி செய்துவருகிறார்கள். தேசிய கீதத்தைக்கூடப் பாட மாட்டோம் என்று கூறிய சிலர், இன்று குடியுரிமைத் திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டங்களில் தேசிய கீதம் இசைக்கிறார்கள். காந்தி படத்தை வைத்திருக்கிறார்கள். இதை வைத்து பார்க்கும்போது இது மோடி அரசுக்கு கிடைத்துள்ள வெற்றி.
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அமைதியாக நடந்து முடிந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இது போன்ற உள்ளாட்சித் தேர்தல்களில் அரசியல் கட்சிகளின் சின்னங்கள் இருக்கக் கூடாது என்பதே என் கருத்து. வரும் பிப்ரவரி மாதம் 16 -ம் தேதி  தஞ்சை திலகர் திடலில் ஆன்மீக அரசியல் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, நடிகர் ரஜினிகாந்த், திமுக  தலைவர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் மற்றும் ஆன்மீகவாதிகளுக்கு அழைப்பு விடுக்க உள்ளோம்.” என்று அர்ஜூன் சம்பத் தெரிவித்தார்.