எம்.ஜி.ஆர். சிலையின் நிழலில் நின்று ‘தமிழ்நாட்டில் நல்ல தலைவர் இல்லை. அந்த வெற்றிடத்தை நிரப்பவே நான் வருகிறேன். என்னால் எம்.ஜி.ஆர். கொடுத்த நல்லாட்சியை கொடுக்க முடியும்!’ என்று ரஜினி சொன்ன வாக்கியங்கள் பெரும் பிரளயத்தையே உருவாக்கியுள்ளன.

குறிப்பாக, அ.தி.மு.க.வின் புதிய தலைமையின் மேல் கடும் அதிருப்தியிலிருக்கும் எம்.ஜி.ஆர். ஆதரவாளர்களையும், தொண்டர்களையும் வளைக்கவே இப்படியொரு டயலாக்கை ரஜினி உதிர்த்திருக்கிறார் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

ரஜினியால் அப்படி எம்.ஜி.ஆர். ரசிகர்களையும், அ.தி.மு.க. தொண்டர்களையும் வளைக்க முடியுமா? அவர் போல் நல்லாட்சி தர முடியுமா? என்று ரஜினியுடன் அதே மேடையில் நின்று எல்லாவற்றையும் கவனித்த முக்கிய மனிதர்களிடம் கேட்டபோது...

“புரட்சித்தலைவருக்கு பிறகு எத்தனையோ தலைவர்களைப் பார்த்துவிட்டோம். அவரது இடத்தை ரஜினியால் மட்டுமல்ல யாராலும் தொட கூட முடியாது. ரஜினியின் பேச்சு எம்.ஜி.ஆர். விசுவாசிகளை வளைப்பது போலத்தான் உள்ளது. ஆனால் அது எடுபடாது.” என்கிறார் மாஜி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. சமரசம்.

நடிகை லதாவோ “எம்.ஜி.ஆர்.க்கு நிகர் யாருமில்லை என்பதை ரஜினியே அந்த மேடையில் சொன்னார். முதலில் இவர் கட்சியை மக்களிடம் கொண்டு செல்லட்டும். அடுத்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றால் அப்போது அவரது பக்கம் எம்.ஜி.ஆர். விசுவாசிகள் நகர்வார்களா என்பது தெரியும். யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்.” என்றிருக்கிறார்.

விழாவை நடத்திய ஏ.சி.சண்முகமோ ”இந்த சிலையை ரஜினி திறக்க வேண்டும் என்பதற்காகத்தான் இரண்டு மாத காலம் காத்திருந்தேன். ரஜினியை தவிர வேறு யார் திறந்திருந்தாலும் அந்த நிகழ்வு இவ்வளவு சிறப்பாக இருந்திருக்காது. எனது கட்சி எவ்வளவோ சரிவுகளை சந்தித்திருக்கிறது, அதை மீறித்தான் அரசியல் செய்கிறேன். 

இந்த நேரத்தில் அற்புத விடிவெள்ளியாக ரஜினி வந்திருக்கிறார். அவரோடு கூட்டணியிலிருப்பேன், அவரோடு வாழ்நாள் முழுவதும் இருப்பேன். ஆனால் கட்சியை கலைக்க மாட்டேன்.” என்கிறார் உருகலாக.

ஐசரி கணேசோ “எம்.ஜி.ஆர். உடன் ரஜினியை ஒப்பிடலாமா என்பது போகப்போகத்தான் தெரியும். ராமனுக்கு அணில் போல் ரஜினிக்கு பின்னால் இருந்து உதவுவேன். ஆனால் ரஜினியே அழைத்தாலும் கூட அவரது கட்சியில் போய் சேரமாட்டேன்.” என்கிறார்.

ரஜினி எம்.ஜி.அர். ஆவாரா, மாட்டாரா?ன்னு ஆளாளுக்கு கருத்துச் சொன்னாங்களே நம்ம ‘கறுப்பு எம்.ஜி.ஆர்.’ விஜயகாந்த் ஏன் பாஸ் எதுவுமே சொல்லலை?!