ரஜினி அரசியலுக்கு வருவாரா? அல்லது அவர் வந்தால் நன்றாக இருக்கும், அவர் நிச்சயம் அரசியலுக்கு வரவேண்டும் என்று மக்களிடையேயும், ரசிகர்கள், சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகள் மத்தியல் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது. இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரக்கூடாது என்று கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஜோதிடர் சாந்த குமார் கூறியிருக்கிறார்.

 

இதுகுறித்து அவர், ’’நான் கடந்த 22 ஆண்டுகளால் ஜாதகம் பார்த்து வருகிறேன். தற்போது ரஜினியின் ஜாதகத்தை ஆராய்ந்துப் பார்த்தேன். அவரின் மகர ராசி, சிம்ம லக்னத்திற்கு டிசம்பர் மாதத்தில் சனிப் பெயர்ச்சி வருகிறது. அதன்படி வரும் டிசம்பர் மாதத்திலிருந்து 3 வருடங்கள் அவருக்கு நேரம் சரியில்லை. உடல் உபாதைகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

ஏனென்றால், கடந்த 2010ம் ஆண்டு இதுபோன்ற சூழ்நிலை தான் அவருக்கு ஏற்பட்டது. ஆகையால், எந்த சூழலிலும் அவர் அரசியலில் ஈடுபடக்கூடாது. வீட்டிலிருந்தபடியே ஓய்வெடுத்துக் கொண்டு ஆன்மிகத்தில் ஈடுபட்டால் இந்த கண்டத்தைத் தாண்டி வரலாம். அரசியலுக்கு வந்தால் மிகப்பெரிய இழப்பை சந்திக்கக் கூடும். அதுமட்டுமல்லாமல் மிகப்பெரிய எதிரி கூட்டமும் அவருக்கு உருவாகும். ஆகையால், அரசியலுக்கு வராமல் வீட்டிலேயே ஓய்வெடுத்தால் அவரின் ஆயுட்காலம் கூடி இன்னும் 16 வருடங்களுக்கு நன்றாக இருப்பார்’’என அவர் கூறியிருக்கிறார்.