அரசியலுக்குள் வந்துவிட்ட கமல்ஹாசனும், வரப்போவதாக அறிவித்திருக்கும் ரஜினிகாந்தும் தி.மு.க.வின் வாக்குகளைத்தான் பிரிப்பார்கள். ஜெயலலிதா இறந்ததால் அ.தி.மு.க.விலிருந்து வெளியேறும் அதிருப்தி வாக்கு வங்கியில் ஆன்மிக நாட்டம் உடையோரின் வாக்குகளை ரஜினிகாந்தும், நாத்திக நாட்டமுடையவர்களின் வாக்குகளை கமல்ஹாசனும் பிரிப்பார்கள்! இதைத்தான் பி.ஜே.பி.யும் எதிர்பார்க்கிறது! என்று ஏஸியாநெட் தமிழ் இணையதளம் அப்போதே எழுதியிருந்தது. 

இந்நிலையில் அ.தி.மு.க.வின் வி.ஐ.பி. செய்தி தொடர்பாளரான (!?) அமைச்சர் ஜெயக்குமாரும் இதையே வழிமொழிந்துள்ளார் இப்போது. தேர்தல் குறித்து பேசியிருக்கும் அவர், “படிக்காத மாணவர்களுக்குதான் தேர்வை கண்டு பயம். எங்களுக்கு தேர்வை பற்றி எந்த கவலையும் இல்லை. எப்போது தேர்வு வைத்தாலும் நாங்கள் ‘அவுட் ஸ்டாண்டிங்’தான். என்று தேர்தலை பற்றி பேசியிருப்பவர், நடிகர்கள் ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் தி.மு.க.வின் வாக்குகளைத்தான் பிரிப்பார்கள். அவர்களால் எங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை.” என்று தடாலடியாக  பேட்டி தட்டியுள்ளார். 

ஐந்து மாநில தேர்தல்களில் பி.ஜே.பி.க்கு கிடைத்த அடியை ‘இது பி.ஜே.பி.யின் செல்வாக்கு சரிவை காட்டுகிறது.’ என்று ரஜினிகாந்த் கமெண்ட் அடித்திருந்தார். இதில் பி.ஜே.பி. பெரிய அளவில் அப்செட் ஆகியிருந்தது. இருந்தாலும் இந்த வருத்தத்தை மறைத்தபடி, ரஜினியை விரைந்து கட்சி துவக்க சொல்வதோடு, தங்களுக்கு ஆதரவான அரசியல் நிலைப்பாட்டை எடுக்க சொல்லி டெல்லி லாபி பிரஷர் கொடுப்பதும், ரஜினி இதற்கு யோசிப்பதுமான பரபரப்புகள் தொடரும் நிலையில் இந்த வாதமும் முக்கியத்துவம் பெறுகிறது ஒரு கோணத்தில். 

ஆனால் அதேவேளையில் ‘கமல் மற்றும் ரஜினியால்  தமிழக அரசியலில் எந்த விளைவும் ஏற்படப்போவதில்லை.” என்று ஒரு பக்கம் போட்டுப் பொளக்கும் விமர்சகர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.