வரும் சட்டப்பேரவை தேர்தலில் திமுகவை தோல்வி அடையச் செய்துவிட்டால் போதும் 2026ம் ஆண்டிற்குள் தமிழகத்தில் பாஜகவை காலூன்ற வைத்துவிடலாம் என்பது தான் டெல்லி மேலிடத்தின் தற்போதைய வியூகமாக உள்ளது என்கிறார்கள்.

பத்தாண்டு கால அதிமுக ஆட்சியின் மீது இருக்கும் அதிருப்தி மற்றும் தமிழகத்தில் பாஜகவிற்கு பெரிய அளவில் வாக்கு வங்கி இல்லாதது இந்த இரண்டையுமே பாஜக மேலிடம் புரிந்தே வைத்துள்ளது. இதனால் தான் ரஜினியை அரசியல் களத்தில் இறக்கி திமுகவிற்கு நெருக்கடி கொடுக்க ஆரம்பம் முதலே பாஜக முயன்று வருகிறது. ஆனால் தற்போது வரை இந்த விஷயத்தில் ரஜினி பாஜகவிற்கு துளியும் பிடி கொடுக்கவில்லை. மேலும் அதிமுகவும் கூட கூட்டணியை விரும்பவில்லை என்பதை பாஜக புரிந்து வைத்துள்ளது.

கட்டாயமாக ஒரு கட்சியுடன் கூட்டணி வைத்தால் என்ன ஆகும் என்பது பாஜகவிற்கு நன்கு தெரியும். கடந்த 2011ம் ஆண்டு திமுகவை மிரட்டி காங்கிரஸ் சுமார் 63 இடங்களை பெற்று சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டது. அந்த தேர்தலில் தோல்வி அடைந்த திமுக தற்போது வரை ஆட்சிக் கட்டிலில் ஏற முடியவில்லை. எனவே அதிமுகவை மிரட்டி கூட்டணி வைப்பதுஎன்பது திமுகவிற்கு சாதகமாகிவிடும் என்பதும் பாஜகவிற்கு தெரியும். தமிழகத்தில் திமுக ஆட்சியில் இருப்பதை விட அதிமுக ஆட்சியில் இருப்பது தான் பாஜகவின் எதிர்காலத்திற்கு நல்லது என்பதும் அந்த கட்சித் தலைவர்களுக்கு தெரியாமல் இல்லை.

எனவே தான் அண்மைக்காலமாக பாஜக அரசிற்கு எதிராக தமிழகத்தில் அதிமுக அரசு என்ன செய்தாலும் டெல்லி மேலிடம் சகித்துக் கொண்டிருப்பதாக கூறுகிறார்கள். இந்த சகிப்புத்தன்மைக்கு காரணம் அதிமுக – பா ஜக மோதலால் திமுக பலன் அடைந்துவிடக்கூடாது என்பது தான் என்றும் சொல்கிறார்கள். இந்த நிலையில் தான் உள்துறை அமைச்சரும் பாஜகவில் பிரதமர் மோடிக்கு பிறகு அதிகாரம் படைத்தவருமான அமித் ஷா சென்னை வர உள்ளார். அடுத்த ஆண்டு தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.

எனவே அமித் ஷாவின் வருகை நிச்சயம் தமிழகத்தில் அரசியல் ரீதியிலான தாக்கங்களை ஏற்படுத்தும். பாஜகவை பொறுத்தவரை அடுத்த ஆண்டு மேற்கு வங்கம், ஒடிசா, அருணாச்சல் பிரதேசத்தில் ஆட்சி அமைப்பது உறுதி என்று நம்புகிறது. தென் மாநிலங்களவை பொறுத்தவரை கேரளாவில் பாஜக நிச்சயம் தேர்தலில் மாற்றத்தை ஏற்படுத்தும் சூழல் உள்ளது. ஆனால் தமிழகத்தில் தான் பாஜகவின் தேர்தல் களம் பூஜ்யம் என்கிற நிலையில் உள்ளது. கன்னியாகுமரியை தாண்டி பாஜக தமிழகத்தில் எந்த தாக்கத்தையும் எப்போதும் ஏற்படுத்தியதில்லை.

இந்த கணக்கை எல்லாம் கருத்தில் கொண்டு பாஜக மேலிடம் வகுத்துள்ள வியூகம் தான் திமுகவை தோல்வி அடையச் செய்வதற்கான திட்டம் என்கிறார்கள். திமுகவை தோற்கடித்து மறுபடியும் அதிமுகவை ஆட்சிக்கு கொண்டுவந்துவிட்டால் எளிதாக பாஜகவை தமிழகத்தில் காலூன்றச் செய்துவிடலாம் என்று கணக்கு போட்டுள்ளது பாஜக. தமிழகத்தை பொறுத்தவரை தற்போதைய சூழலில் திமுக கூட்டணி மிகவும் வலுவாக உள்ளது. எனவே அதிமுக வெற்றி பெற வேண்டும் என்றால் திமுக கூட்டணியை பலவீனப்படுத்த வேண்டும்.

இதற்கு கடந்த சட்டப்பேரவை தேர்தலில் ஜெயலலிதா பின்பற்றிய 3வது அணி என்பதைத்தான் தற்போது பாஜகவும் கையில் எடுக்கப்போவதாக கூறுகிறார்கள். ஒரு வேளை ரஜினி அரசியல் கட்சி ஆரம்பிக்கவில்லை என்றாலும் திமுக – அதிமுகவிற்கு மாற்றான 3வது அணிக்காக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட வைப்பது என்பது தான் உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் சென்னை விசிட்டின் முக்கிய நோக்கம் என்கிறார்கள். கமல், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் 3வது அணி அமைத்தால் அதனை ரஜினியை வைத்து ஆதரித்து திமுகவிற்கு நெருக்கடி ஏற்படுத்தலாம் என்று பாஜக கணக்கு போட்டுள்ளது.

சட்டப்பேரவை தேர்தலில் 21 தொகுதிகள் தான் என்று திமுக எடுத்துள்ள முடிவு நிச்சயம் காங்கிரசை கூட்டணியில் இருந்து வெளியேற்றி 3வது அணியில் சேர்க்கும் என்றும் பாஜக நினைக்கிறது. அப்படி 3வது அணி அமையும் பட்சத்தில் ரஜினி மூலமாக அதற்கு விளம்பரம் செய்தால் பொதுவான வாக்குகள் பிரிந்து திமுகவிற்கு பின்னடைவு ஏற்படும் என்பது தான் வியூகம். இதே போல் மு.க.அழகிரியை ஸ்டாலினுக்கு எதிராக கொம்பு சீவி விட்டால் அதுவும் திமுகவிற்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்கிறார்கள். எனவே அமித் ஷாவின் சென்னை வருகையை ரஜினி, மு.க.அழகிரியின் முடிவை பொறுத்தே வெற்றியா தோல்வியா என்று தீர்மானிக்க முடியும்.