ரஜினி தனிக்கட்சி தொடங்கி சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டால் இன்னொரு எம்.ஜி.ஆராக உருவெடுப்பார் என பாஜக ஆதரவாளரும், ஆடிட்டருமான குருமூர்த்தி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

 

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான மாபெரும் வெற்றி பெற்று 354 இடங்களைப் பிடித்துள்ளது. காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி, 90 இடங்களை மட்டுமே கைப்பற்றியுள்ளது. தமிழகத்தில் 38 தொகுதிகளை திமுக - காங்கிரஸ் கூட்டணி கைப்பற்றியுள்ளது. 22 தொகுதிகளுக்கான சட்ட மன்ற தேர்தலில் அதிமுக போதிய இடங்களைப் பெற்றதால் ஆட்சி மாற்றம் இல்லை என்ற நிலையே உள்ளது. இதனால் சட்டமன்ற தேர்தலின் போது கட்சி ஆரம்பிக்கவிருப்பதாக கூறிய ரஜினிகாந்த், கட்சி ஆரம்பிக்க இன்னும் இரண்டு ஆண்டுகள் ஆகக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் ரஜினி கட்சி தொடங்கினால் பாஜகவுடன் கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளதா என்பது குறித்து ஆடிட்டர் எஸ்.குருமூர்த்தி கூறும்போது, “எம்.ஜி.ஆரைப் போல ரஜினிகாந்தும் ஆன்மிகத்திலும், தேசியத்திலும் நம்பிக்கை கொண்டவர். அதிக மக்கள் செல்வாக்கு கொண்டவர். எனவே அவர் தனிக்கட்சி தொடங்கி சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டால் இன்னொரு எம்.ஜி.ஆராக உருவெடுப்பார்.

பாஜகவுடன் ரஜினி கூட்டணி அமைக்க வேண்டும் என நான் தொடர்ந்து சொல்லி வருகிறேன். ஆனால் இதுபற்றி அவரிடம் தான் கேட்க வேண்டும். ரஜினி அரசியலில் சாதிப்பார் என்பது எனது நம்பிக்கை” என தெரிவித்துள்ளார்.