மறைந்த கன்னியாகுமரி எம்.பி. வசந்தகுமாரின் மகனும் நடிகருமான விஜய் வசந்துக்கு அண்மையில் தமிழக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. இதனையடுத்து கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று தூத்துக்குடிக்கு விமானத்தில் வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். “கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத்தேர்தலில் கட்சி மேலிடம் முடிவு செய்தால் நான் போட்டியிடுவேன். மற்றபடி மக்கள் சேவையாற்ற வேண்டும் என்பது மட்டுமே என்னுடைய விருப்பம். முதலில் வியாபாரம், பிறகு சினிமா என்னுடைய ஆர்வம் இருந்தது. சினிமாவுக்கு பொழுதுபோக்காகதான் சென்றேன். 

ஆனால், தற்போது முழு நேர அரசியலில் மட்டுமே ஈடுபட்டு மக்கள் சேவையாற்ற விரும்புகிறேன். நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வராதது திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு பலம். காங்கிரஸ் கட்சியை அடிமட்டத்திலிருந்து பலப்படுத்தும் பணி தற்போது நடந்து வருகிறது. தேர்தலில் அதிமுக மீதான அதிருப்தி காங்கிரஸ் கூட்டணியின் வெற்றிக்கு வழிவகுக்கும்.” என்று விஜய் வசந்த் தெரிவித்தார்.