ரஜினி - கமல் இருவரையும் சமமாக தான் கருதுவதாகவும், அவர்கள் போட்டியிடும் தொகுதிகளில் அவர்களுக்காக பிரச்சாரம் செய்ய உள்ளதாகவும் நடிகர் பிரபு கூறியுள்ளார்.

நடிகர்கள் ரஜினிகாந்த், கமல் ஹாசன் இருவரும் தங்களது அரசியல் பயணத்தை தொடங்கி உள்ளனர். நடிகர் கமல் ஹாசன், கட்சி மற்றும் சின்னத்தை அறிவித்துள்ளார். மக்கள்
நீதி மய்யம் கட்சி என்ற பெயரில் துவங்கியுள்ள அவர், உறுப்பினர்களைச் சேர்க்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். அதே நேரத்தில் பொதுக் கூட்டம் நடத்தி வருகின்றனர்.

ரஜினிகாந்த் மக்கள் மன்றம் மட்டும் தற்போது செயல்பட்டு வருகிறது. ரஜினிகாந்த் இன்னும் முழுவீச்சில் அரசியலில் இறங்கவில்லை. தற்போது அவர், ஆன்மீக பயணம்
மேற்கொண்டுள்ளார். 

ரஜினி, கமல் அரசியல் பிரவேசத்துக்கு சினிமா துறையைச் சேர்ந்தவர்கள் பலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், நடிகர் பிரபு, கமல் - ரஜினி போட்டியிடும்
தொகுதிகளில் அவர்களுக்காக பிரச்சாரம் செய்ய உள்ளதாக கூறியுள்ளார்.

திருவண்ணாமலையில் கல்யாண் ஜுவல்லர்ஸ் நகைக் கடையின் புதிய கிளை திறப்பு விழா நடந்தது. இதில் நடிகர் பிரபு கலந்து கொண்டு கல்யாண் ஜுவல்லர்ஸ் நகைக்
கடையை திறந்து வைத்தார். 

கடையை திறந்து வைத்த பிறகு, நடிகர் பிரபு, செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், நடிகர்கள் ரஜினி, கமல் அரசியலுக்கு வருவது தனக்கு மகிழ்ச்சி
அளிப்பதாக கூறினார். அவர்கள் இருவரையும் சமமாகவே பார்க்கிறேன். ரஜினி - கமல் போட்டியிடும் தொகுதிகளில் அவர்களுக்காக பிரச்சாரம் செய்ய உள்ளதாகவும் நடிகர்
பிரபு கூறினார்.