அடுத்த தேர்தலில் ரஜினி போட்டியிடுவார் என்ற நம்பிக்கையில்  ரஜினி ரசிகர்கள் #அடுத்த_ஓட்டு_ரஜினிக்கே என்ற ஹாஷ்டேக்கை உருவாக்கி இந்தியளவில் ட்ரெண்ட் செய்துள்ளனர்.
கடந்த 2017 டிசம்பர் 31-ம் தேதி அரசியலில் தான் இறங்கப் போவதாக அறிவித்த ரஜினி, சட்டப்பேரவைத் தேர்தலில் தன்னுடைய படை போட்டியிடும் என்று அறிவித்தார்.  தனது ரசிகர் மன்றங்களை ஒருங்கிணைக்கும் வகையில் 'ரஜினி மக்கள் மன்றம்' என்று பெயரை மாற்றினார். மேலும் தமிழகத்தில் உள்ள 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பூத் கமிட்டியில் ஆட்களை நியமிக்கவும், ஒவ்வொரு மாவட்டத்திலும்  ரஜினி ரசிகர்களை உறுப்பினர்களாக்கவும் பணிகள் நடைபெற்றுவருகின்றன.


இதுபோன்ற பணிகள் நடைபெற்ற வந்த வேளையிலேயே ரஜினி தொடர்ச்சியாகப் படங்களில் நடித்துவருகிறார். இதனால், ரஜினி கட்சி ஆரம்பிப்பாரா என்ற சந்தேகம் அவருடைய ரசிகர்களுக்கு உள்ளது. அவருடைய ரசிகர்கள் பலர் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட ஆர்வம் காட்டினார்கள். ஆனால், சட்டப்பேரவைத் தேர்தல்தான் தன்னுடைய இலக்கு என ரஜினி அறிவித்துள்ளதால், அவருடைய் ரசிகர்கள் குழப்பம் அடைந்தனர். கடந்த ஆண்டு கட்சி தொடங்கிய கமல்ஹாசன்  தேர்தலில் போட்டியிடுவதைப் பார்த்து பெருமூச்சு விட்டனர்.  நேற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் நடுநிலை வாக்களார்களிடம் கமல், சீமானுக்கு வரவேற்பு இருக்கும் என்று பரவலாகப் பேசப்படுகிறது.

இந்நிலையில் அடுத்தத் தேர்தலில் ரஜினி கட்சி  தொடங்கி போட்டியிடும் நிலையில், ரஜினிக்கும் நல்ல வரவேற்பு இருக்கும் என்ற நம்பிக்கை ரஜினி ரசிகர்களுக்கு அதிகரித்துள்ளது. இதனை வெளிப்படுத்தும் வகையில் நேற்று தேர்தல் முடிந்த அடுத்த சில மணி நேரங்களில்  #அடுத்த_ஓட்டு_ரஜினிக்கே என்ற ஹாஷ்டேக்கை உருவாக்கி ட்ரெண்ட் செய்யத் தொடங்கினார். நேற்று இரவில் இந்த இந்த ஹேஷ்டேக் இந்தியளவில் ட்ரெண்ட்டாகி முதலிடத்தைப் பிடித்தது. தற்போது இந்த ஹாஷ்டேக் இரண்டாம் இடத்தில் இருந்துவருகிறது. 
திடீரென்று உருவாக்கப்பட்ட இந்த ஹாஷ்டேக், இந்தியாவில் முதலிடம் பிடித்ததால் ரஜினி ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.