இந்து பயங்கரவாதம் உருவாகி விடும் என அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியதற்கு திமுக பதிலடி கொடுத்துள்ளது. 

இதுகுறித்து முரசொலியில் வெளியாகி உள்ள தலையங்கத்தில், ‘’ஜெயலலிதா இருக்கும் வரை தனது அமைச்சர்களின் நாக்கை அறுத்து வைத்திருந்தார். அவர் இறந்ததும் நாக்கு முளைத்துவிட்டது. ஏன், அவர் அறுத்து வைத்திருந்தார் என்பது இப்போது தெரிகிறது. சில அமைச்சர்களின் பேச்சுக்கள் மூலமாக.

அமைச்சர் ஜெயக்குமார், சி.வி.சண்முகம், செல்லூர் ராஜூ மாஃபா.பாண்டியராஜன், ராஜேந்திர பாலாஜி ஆகிய ஐவர் இதில் முன் வரிசை நாக்குகள்.  ஜெயகுமார், செல்லூர் ராஜூ, சி.வி.சண்முகம் ஆகிய மூவரும் இப்போது கொஞ்சம் பரவாயில்லை. மாஃபா பாண்டியராஜன், ராஜேந்திர பாலாஜி ஆகிய இருவரும் முழு சந்திரமுகியாகவே மாறிவிட்டார்கள். அதிலும் ராஜேந்திரபாலாஜிக்கு ரொம்பவே முற்றிப்போய் விட்டது. அவர் ஏதோ உளறுகிறார் என்று கடந்து போய்விட முடியாது. இந்த உளறல்கள் காரியக்கார உளறல்கள். பாஜகவின் காலை பிடித்து வாழத்துடிக்கும் உளறல்கள். இந்த உளறல்களின் உச்சம்தான் இந்து பயங்கரவாதம் பற்றி ராஜேந்திரபாலாஜி பேசியிருப்பது.

 இஸ்லாமிய தீவிரவாதத்தை உருவாக்கும் நோக்கத்தில் சில இயக்கங்கள் தொடர்ந்து அரசியல் செய்தால் இந்து பயங்கரவாதம் உருவாவதை யாராலும் தடுக்க முடியாது என்கிறார் ராஜேந்திர பாலாஜி. இஸ்லாமிய தீவிரவாதம் உருவானால் அதனை ஒடுக்கும் கடமை அரசுக்கு உண்டே தவிர அதற்கு மாற்று ’இந்து பயங்கரவாதம்’ அல்ல. வன்முறைக்கு தீர்வு, வன்முறை தான் என்றால் முடிவேது..? ராஜேந்திர பாலாஜி தூண்டிவிடும் வலி என்பது நாட்டை நாசமாக்கும் வழி. நாட்டின் நிம்மதியை கெடுக்கும் வழி.  நாடு என்பதே காலப்போக்கில் இல்லாமல் ஆக்கும் வழி.

இத்தகைய வன்முறை வாய்ச்சவடால்களை பாஜகவின் நாலாந்தர பேச்சாளர்கள் சிலர் பேசினால் அதற்கு பதில் சொல்லத் தேவையில்லை. ஆனால் பேசி இருப்பவர் அமைச்சர். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்ட ஒரு அமைச்சர். அனைத்து மக்களுக்கும் பொதுவானவராக நடந்து கொள்ள வேண்டியவர். அனைத்து மக்களாலும் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். அப்படிப்பட்ட ஒருவர் சட்டங்களைக் கெடுக்கிறார். சமூக நல்லிணக்கத்தை கெடுத்து வன்முறையை தூண்டிவிடுகிறார். வழக்கம்போல முதலமைச்சர் வேடிக்கை பார்க்கிறார்’’எனக் கூறப்பட்டுள்ளது.