ஒரு அமைச்சரால் இப்படியெல்லாம் கூட பேசமுடியுமா? என்று தமிழகத்தை தெறிக்கவிட்டுக் கொண்டிருக்கிறார் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி. எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினில் துவங்கி, காங்கிரஸ் வரையில் தூக்கிப்போட்டு மிதிப்பேன், அழிச்சிடுவோம், ஜாக்கிரதையா இருந்துக்கோங்க, துப்பாக்கிய எடுத்து சுடுங்க என்று தாறுமாறாக விமர்சித்துக் கொட்டிக்  கொண்டிருக்கிறார்.

 

மீடியாவின் மைக்கை பார்த்தாலோ, மேடையில் மைக்கை பார்த்தாலோ கன்னாபின்னாவென இவர் தட்டும் பேட்டிகள் பத்தாது என்று இவரது பேச்சுக்களின் வீடியோ கிளிப்பிங்ஸை சமூக வலைதளங்களில் வெளியிட்டு, இவரை போற்றிக் கொண்டாட ஒரு குரூபே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. 

கருத்துச் சுதந்திரத்தை முறையாக பயன்படுத்துவது அமைச்சர் ராஜேந்திரபாலாஜிதான். அமெரிக்காவுக்கு சமீபத்தில் மோடி சென்றிருந்தபோது, அவரை ‘இந்தியாவின் தந்தை’ என டிரம்ப் அழைத்தார். இதைத்தான் எங்கள் அமைச்சர் அன்றே ‘டாடி’ என்றழைத்துவிட்டார். ஆக டிரம்புக்கே இந்த பாயிண்ட் டை எடுத்துக் கொடுத்து பாடம் சொன்னவராகி விட்டார் எனப்புகழ்கிறார்கள் ராஜேந்திர பாலாஜியை. ஆனால் எதிர்க்கட்சிகளோ ‘ராஜேந்திரபாலாஜியின் பேச்சுக்களையும், செயல்களையும் அவர்களின் கட்சியினரே கோமாளித்தனமாகத்தான் பார்க்கிறார்கள்’என்று போட்டுத் தாக்குகிறார்கள். 

இது ஒருபுறமிருக்க, அடிக்கடி டெல்லி செல்லும்  ராஜேந்திரபாலாஜி அங்கிருந்து தனியார் ஹெலிகாப்டர் வாடகைக்கு எடுத்துக் கொண்டு, அருகில் உள்ள பல மாநிலங்களுக்கு சென்று வருவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார். டெல்லியை சுற்றியுள்ள பிரதிசித்தி பெற்ற கோவில்கள் அனைத்துக்கும் சென்று விட்டு வருகிறார். இப்படி ராஜேந்திர பாலாஜி, திருப்பதி சென்றபோதுதான், அங்கு, திருப்பதி - திருமலை தேவஸ்தான அதிகாரிகள், ராஜேந்திர பாலாஜியிடம் சண்டையிட்டதாக பரபரப்பு கிளம்பியது.

சமீபத்தில் அப்படி ட்டெல்லி சென்று தனியார் ஹெலிக்காப்டரை வாடகைக்கு அமர்த்தி சுற்றிப்பார்க்க சென்றுள்ளார். அப்போது குஷியாகி ஹெலிகாப்டர் ஓட்டுநரை பாராட்டி, ‘’தம்பி நீங்க அருமையாக ஹெலிகாப்டர் ஓட்டுறீங்க...’’எனப் பாராட்டி விட்டு 50 ஆயிரம் ரூபாயை அன்பளிப்பாக வழங்கி இருக்கிறார்.  இதனால் திக்குமுக்காடிப்போய்விட்டாராம் ஹெலிகாப்டர் பைலட்.