ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் டோக்கன் கொடுத்த அமமுகவுக்கு பரிசுப் பெட்டி சின்னம் ஒதுக்கப்பட்டது பொருத்தமாக உள்ளது என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விமர்சனம் செய்துள்ளார். 

தமிழகத்தில் மக்களவை தேர்தல் மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தல் வருகிற ஏப்ரல் 18-ம் தேதி நடைபெற உள்ளது.  இந்த தேர்தலில் டி.டி.வி. தினகரன் தலைமையிலான அ.ம.மு.க. போட்டியிடுகிறது. அக்கட்சிக்கு குக்கர் சின்னம் ஒதுக்க முடியாது என அறிவித்த உச்சநீதிமன்றம், பொது சின்னம் வழங்க பரிசீலனை செய்யலாம் என தேர்தல் ஆணையத்திடம் கூறியது. இதனை தொடர்ந்து, இந்திய தேர்தல் ஆணையத்திடம் தினகரன் தரப்பில் பொது சின்னம் வழங்க கோரிக்கை வைக்கப்பட்டது. 

இந்நிலையில் டிடிவி.தினகரனின் அமமுக கட்சிக்கு, பரிசுப்பெட்டி சின்னம் ஒதுக்கி தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது. இந்நிலையில், பரிசுப் பெட்டி சின்னம் குறித்து, பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி டிடிவி தினகரனை வசைபாடியுள்ளார். செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அவர் ரூ.20 டோக்கன் தந்த அ.ம.மு.க.வுக்கு பரிசுப்பெட்டி சின்னம் ஒதுக்கீடு பொருத்தமானது. இந்த முறை மக்கள் ஏமாற மாட்டார்கள்.

 

மேலும், அதிமுக, திமுக என பெரிய கட்சிகள் இருக்கும்போது, தினகரனாவது இந்தச் சின்னத்தை வைத்துக்கொண்டு ஜெயிப்பதாவது? மக்களவை தொகுதிகளிலும் 18 சட்டப்பேரவை தொகுதிகளிலும் தினகரன் கட்சி டெபாசிட் கூட வாங்கப்போவதில்லை என்று கடுமையாக விமர்சித்தார். டிடிவி.தினகரன், முன்பு இரட்டை இலை நமக்குத்தான் கிடைக்கும் என்று சொல்லிக்கொண்டே இருந்தார். பிறகு இப்போது குக்கர் சின்னம் கிடைத்தே தீரும் என்று அவருடன் இருப்பவர்களையெல்லாம் நம்பவைத்தார். ஆனால் இப்போது பரிசுப் பெட்டி சின்னம் கிடைத்திருக்கிறது. இந்தத் தேர்தலுடன் டிடிவி.தினகரன் கட்சிக்கு மூடுவிழா எடுப்பார்கள் மக்கள் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.