*    முதல்வராக வேண்டும் என்பதற்காக சசிகலா முன்பு நான்கு காலில் மண்டியிட்டவர் எடப்பாடி. அந்த நன்றி மறந்தவரோடு, தென்மாவட்டத்து எட்டப்பன் ஓ.பி.எஸ். கைகோர்த்து இருக்கிறார். இரட்டை இலை சின்னம் நல்லவர்கள் கையில் இருந்தால் மட்டுமே வெற்றியை தரும்:        தினகரன். 
(அது சரிண்ணே, போயஸ்ல இருந்து  உங்க தியாக தலைவி டீமை கொத்தோட தூக்கி வெளியில எறிஞ்சாங்களே ஜெயலலிதா! அப்புறம் மன்னிப்பு கடுதாசி எழுதிக் கொடுத்துட்டு உள்ள வந்தீங்களே? ஏன் அப்படி கோபம் வந்துச்சு ஜெ.,வுக்கு? சசி செய்ய திருவிளையாடல் என்ன?ன்னு இதேமாதிரி ஓப்பன் டூப்பனா சொல்லுங்க பார்ப்போம்.)

*    எந்த சாதனையையும் மக்களுக்காக செய்யாத தி.மு.க.வினர் இந்த ஆட்சியின் திட்டங்களை குறைகூற முடியாமல், வெறும் பொறாமையில் ‘இந்த ஆட்சி கவிழ்ந்துவிடும்.’ என்று ஜோதிடம் கூறி வருகிறார்கள் : பன்னீர்செல்வம். 
(சாதனைன்னா நாம படைத்தது அல்லவா சாதனைண்ணே! பதவிய பறிச்சதுக்காக யுத்தம் நடத்தி, அப்பாலிக்கா துணை பதவியை கொடுத்தாங்க அப்படிங்கிறதுக்காக தன் கூட வந்தவனை நடுத்தெருவுல நிப்பாட்டுன நம்ம சாதனையையெல்லாம் எவனாச்சும் நெருங்க முடியுமாண்ணே?)

*    எங்கள் கட்சிக்கு ஜாதி, மதம் கிடையாது. அன்பு, பாசம், மக்கள் அவ்வளவுதான். மக்கள் மனசு வைத்தால் மாற்றத்திற்கான விதை தூவப்படும்: கமல்ஹாசன். 
(க்கும், உங்களை சுத்தி நிற்கிற நாலு நிர்வாகிகளை தாண்டி உங்களை நெருங்க முடியலை, நாலு வார்த்தை பேச முடியலை, நல்லது பொல்லாததுகளை சொல்ல முடியலைன்னு உங்க கட்சி நிர்வாகிகங்களே பொங்குறாங்க. முதல்ல அதை மாத்துங்க பாஸு)

*    கருணாநிதியின் மரணத்தில் மர்மம் இருப்பதாக ஓட்டப்பிடாரம் தொகுதி தி.மு.க.வினர் என்னிடம் தெரிவித்தனர். எனவே அது பற்றி முதல்வர் இ.பி.எஸ். விசாரணை ஆனையம் அமைக்க விரைவில் உத்தரவிடுவார்: ராஜேந்திர பாலாஜி. 
(அதுபாட்டுக்கு மேய்ஞ்சுக்கிட்டு இருக்குற பசுவை...வேறொரு பசு கெடுத்துச்சாம்! அப்படியிருக்குண்ணே உங்க கதை. நீங்க பண்ணுற மொக்கை காமெடியில ஏன் முதல்வரை செட் பிராப்பர்ட்டியா இழுத்துவிட்டு அதகளம் பண்றீங்க?)

*    சட்டசபை இடைத்தேர்தலில் வெற்றி பெற மாட்டோம் எனும் பயத்தினாலேயே சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை தி.மு.க. கொண்டு வந்துள்ளது: இ.பி.எஸ். 
(அது கெடக்கட்டும்ணே, நமக்கும் அதே பயம் இருக்கப்போய்தானே திடுதிப்புன்னு மூணு எம்.எல்.ஏ.க்களுக்கு நோட்டீஸ் அனுப்பி, குடைச்சல் கொடுத்து, பெரும்பான்மை எண்ணிக்கையை குறைக்கப்பார்க்கிறோம்?)