தமிழகத்தில் எடப்பாடி  பழனிசாமி தலைமையிலான அரசு பெரும்பான்மை இழந்துவிட்டதால் இந்த அரசைக் கலைக்க வேண்டும் என எதிர்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில். தமிழகத்தில் ஆட்சியைக் கலைப்பதற்கு வாய்ப்பே இல்லை என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

தமிழக அமைச்சர்கள் ஜெயகுமார், தங்கமணி ஆகியோர் டெல்லியில் முகாமிட்டு , மத்திய அமைச்சர்கள் அருண்ஜெட்லி, நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்து தமிழக அரசு கவிழாமல் இருப்பதற்கு உதவி செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.

இதனைத்தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர்  ராஜ்நாத்சிங்கை அமைச்சர்கள் சந்தித்து பேசினார்கள்.  இந்த சந்திப்பின்போது தமிழக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருவது பற்றி விவாதிக்கப்பட்டது.

அப்போது  தமிழகத்தில் ஆட்சியை கலைக்க எந்த வாய்ப்பும் இல்லை’ என்று ராஜ்நாத்சிங் திட்டவட்டமாக கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் ஆட்சியை கலைப்பதற்கு எந்தவித முகாந்திரமும் இல்லை  என்று அமைச்சர்களிடம் அவர் உறுதிபட தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர முடிவு எடுத்துள்ள எதிர்க்கட்சிகள் அதற்காக சபாநாயகரை தான் சந்திக்க வேண்டும். ஆனால்  கவர்னரையும், ஜனாதிபதியையும் ஏன் சந்திக்கிறார்கள்? என்று  ராஜ்நாத் சிங் கூறியதாக  தகவல்கள் வெளியாகியுள்ளன,