2017-18-ம் நிதியாண்டு மத்திய பட்ஜெட்டில் ரெயில் பயணிகள் கட்டணத்தை உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
2017-18ம் நிதியாண்டுக்கான பொது பட்ஜெட் அடுத்த ஆண்டு பிப்ரவரி 1-ந்தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. அடுத்த ஆண்டு முதல் ரெயில் பட்ஜெட்டை, மத்திய பட்ஜெட்டுடன் இணைத்து தாக்கல் செய்ய நிதியமைச்சகம் முடிவு செய்துள்ளது.
இந்நிலையில், ரெயில்வே துறையில் கடந்த சில ஆண்டுகளாக வருவாயை பெருக்க தீட்டப்பட்ட திட்டங்கள் பலனளிக்கவில்லை என்பதால், இப்போது, வருவாயை நேரடியாக அதிகரிக்கும், பயணிகள் கட்டணத்தில் கைவைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இது குறித்து ரெயில்வே துறையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “ ரெயில்வே துறை சமீபத்தில் அறிமுகப்படுத்திய ‘பிளக்சி பேர்’ என்ற, திட்டம் எதிர்பார்த்த அளவு வரவேற்பைப் பெறவில்லை. இந்த திட்டத்தின் படி ராஜ்தானி, துரந்தோ, உள்ளிட்ட சொகுசு ரெயில்களில்ஒவ்வொரு 10 சதவீத டிக்கெட் விற்பனை செய்யப்பட்டவுடன், கட்டணம் அதிகரிக்கும் எனக் கூறப்பட்டு இருந்தது.ஆனால், பயணிகள் மத்தியில் இந்த திட்டத்துக்கு வரவேற்பு இல்லை. இதனால், பயணிகள் வருகையும் குறைந்து கொண்டே வருவதால், எதிர்பார்த்த வருவாயை ஈட்டமுடியவில்லை.
ஆதலால், வருவாயை நேரடியாக அதிகரிக்கும் பயணிகள் கட்டணத்தை அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதற்கான ஆலோசனைகளும் கோரப்பட்டுள்ளன. அதில் பெரும்பாலானவர்கள் பயணிகள் கட்டணத்தை உயர்த்த விருப்பம் தெரிவித்துள்ளனர். இந்த கட்டண உயர்வு அடுத்த பட்ஜெட்டில் தெரியும்'' எனத் தெரிவித்தார்.
ரெயில் கட்டணத்தை மறைமுக உயர்த்தும் வகையில், ரீபண்ட், மற்றும் கட்டண முறைகளில் மாற்றம் கொண்டு வந்தது ரெயில்வே துறை. அப்படிச் செய்தும், வருவாய் உயர்வில் எந்த மாற்றமும் இல்லை.
