ஸ்டாலின் வாயால் வாழ்த்து வாங்குவது, வசிஷ்டர்  வாயால் புகழப்படுவதற்கு சமம் தான். அவ்வளவு எளிதில் யாரிடமும் தன் உள்ளுணர்ச்சியை, சந்தோஷத்தை காட்டிவிடமாட்டார். ஆனால் அப்பேர்ப்பட்ட ஸ்டாலினே ராகுலின் ரசிகனாகிப் போனார் சமீபத்தில். அத்தோடு விட்டாரா? ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்து, புதிய பரபரப்பையும் கிளப்பினார். இதைத்தொடர்ந்து காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்குள் சில அதிருப்தி அலைகள் தோன்றிய பிறகும் கூட ‘நான் சொன்னதில் என்ன தவறு உள்ளது?’ என்று விடாப்பிடியாய் ராகுலை தூக்கிப் பிடிக்கிறார்.

ஸ்டாலினின் அடுத்தடுத்த செயல்பாடுகளும், பேச்சுக்களும் ராகுலையும், சோனியாவையும் வெகுவாகவே சந்தோஷப்படுத்தியுள்ளது. தி.மு.க. காங்கிரஸ் கூட்டணி பக்காவாக செட் ஆகிவிட்டதான கோணத்தில் அரசியல் விமர்சகர்களும் பார்க்கும் நேரத்தில், தமிழக காங்கிரஸ் வி.ஐ.பி. ஒருவரே இந்த கூட்டணி ஆடும் வகையில் அடிக்கட்டையை உருவுகிறார்! என்று தகவல்கள் கசிகின்றன. 

அவர் யார்? என்று கேட்டால்...தமிழக காங்கிரஸ் தலைவரான திருநாவுக்கரசரை கைகாட்டுகிறார்கள் காங்கிரஸ் புள்ளிகள். அதாவது ‘வெறுமனே இந்த நாடாளுமன்ற தேர்தலை மட்டும் கணக்கில் வைத்து நாம் கூட்டணி அமைக்க கூடாது, அடுத்து வரும் இடைத்தேர்தல் மற்றும் ஒரு வேளை சட்டமன்ற பொதுத்தேர்தல் வந்தாலும் வரலாம், அதையும்  மனதில் வைத்தே கூட்டணியை அமைக்க வேண்டும்.

இருபது தொகுதி இடைத்தேர்தலிலேயே நமக்கு ஒரு சீட் கூட வழங்க ஸ்டாலின் தயாராக இருப்பதாய் தெரியவில்லை. இத்தனைக்கும் ஜெயித்தால், அவருக்குதான் நாம் ஆதரவு தருவோம். ஆனாலும் நம்மை புறக்கணிக்கும் அவர், பொது தேர்தலில் மிக மிக மோசமான எண்ணிக்கையில் சீட் தருவார். அதிலும் அடுத்த ஆட்சி தி.மு.க. ஆட்சிதான்! எனும் தகவல் பரவிக்கிடக்கும் நிலையில் அவரை நமக்காக சம்மதிக்க வைப்பது சாத்தியமில்லா காரியம். 

எனவே ஸ்டாலினோடு கூட்டணி வைக்கும் அதேவேளையில், நமக்கு இணங்கி நடக்கும் சில கட்சிகளுக்கு நாம் தலைமை கட்சி போல் ஒரு சூழலை உருவாக்க வேண்டும். அதனால்  தினகரனின் அ.ம.மு.க.வை நம்மோடு இணைத்துக் கொள்வோம். தி.மு.க. நமக்கு தரும் தொகுதிகளில் சிலவற்றை உள் ஒதுக்கீடாக தினகரனுக்கு கொடுப்போம். தினகரன் நம் பக்கம் வருகையில், அ.தி.மு.க.வுக்கு எதிரான வாக்குகள் சிந்தாமல் சிதறாமல் டோட்டலாக நம் கூட்டணிக்கு வரும். புத்திசாலித்தனமான முடிவு இது.” என்று ஒரு ப்ராஜெக்ட் ரிப்போர்ட்டை தனக்கு தோதான காங்கிரஸ் மாஜி எம்.பி.க்கள் மூலமாக ராகுலின் கவனத்துக்கு சேர்த்திருக்கிறாராம். 

இந்நிலையில் அரசரின் இந்த மூவ், காங் புள்ளிகள் சிலர் வாயிலாக ஸ்டாலினுக்கு போக, அவர் கடுப்பாகிவிட்டாராம். அதிகாரப்பூர்வமாக இது பற்றி தகவல் வந்தால் அப்போது ரியாக்ட் செய்யலாம்! என்று விட்டுவிட்டாராம். 

அரசர் இப்படியொரு ரூட் போடுவதற்கு பர்ஷனல் காரணங்கள் ஏதேனும் உள்ளதா? என்று கிளறிப்பார்த்தால், எப்போதுமே அவருக்கும் ஸ்டாலினுக்கும் இடையில் ஓடிக்கொண்டிருக்கும் ஈகோ யுத்தம் ஒரு பக்கமும், பழைய அ.தி.மு.க. பாசத்தை இன்னமும் கைவிடாத அரசர் அக்கட்சியின் அழிவை சகிக்க முடியாமல், எதிர்காலத்தில் சசி கோஷ்டி அ.தி.மு.க.வை கேர்டேக் செய்து பாதுகாப்பதற்காக தன்னால் ஆன சிறு உதவிகள் இது! என்று நினைக்கிறார் என்கிறார்கள். 
அப்டியே சுத்துதுல்ல தல!