தேர்தல் முடிவுகளுக்கு பிறகு சைலண்ட் மோடுக்கு சென்றுவிட்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தன்னை பிரம்மாண்டமாக வெற்றி பெற வைத்த வயநாடு தொகுதி மக்களுக்கு வரும் 7, 8 தேதிகளில் கேரளா செல்கிறார். 
 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் பாரம்பரிய தொகுதியான அமேதியிலும் கேரளாவில் உள்ள வயநாடு ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டார். அமேதி தொகுதியில் 3 முறை தொடர்ச்சியாக வெற்றி பெற்ற ராகுல் காந்தி, பாஜக வேட்பாளர் ஸ்மிருதி இராணியிடம் 55 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.


அதே வேளையில் வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி பிரமாண்ட வெற்றியைப் பெற்றார். அந்தத் தொகுதியில் ராகுல், 7 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் பெற்றார். சுமார் 4.30 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். மேலும் கேரளாவில் உள்ள 20 தொகுதிகளில் 19 தொகுதிகளை காங்கிரஸ் கூட்டணி கைப்பற்றியது. 
இந்நிலையில் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்ததால், ராகுல் காந்தி அப்செட் ஆனார். காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். அவருடைய ராஜினாமாவை ஏற்காத காங்கிரஸ் காரிய கமிட்டியும், அக்கட்சியின் தலைவர்களும் முடிவை திரும்ப பெறும்படி வலியுறுத்திவருகிறார்கள். இதேபோல பல்வேறு காங்கிரஸ் மாநில தலைவர்களும் ராஜினாமா முடிவை திரும்ப பெற ராகுலை வலியுறுத்திவருகிறார்கள்.
கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக சைலண்ட் மோடில் இருந்த ராகுல், வரும் 7, 8 ஆகிய தேதிகளில் வயநாடு தொகுதிக்கு செல்ல இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தன்னை பிரமாண்டமாக வெற்றி பெற வைத்த வயநாடு தொகுதி மக்களுக்கு ராகுல் நன்றி தெரிவிக்க உள்ளார். மேலும் கேரளாவில் காங்கிரஸை வெற்றி பெற வைத்த வாக்காளர்களுக்கும் ராகுல் நன்றி தெரிவிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.