கௌரி லங்கேஷ், கொலையை பாஜக, ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தங்களுடன் இணைத்து பேசிய வழக்கில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி 15 ஆயிரம் உத்தரவாதத்தில் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.

பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ், கொலையை பாஜக, ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தங்களுடன் இணைத்து பேசியதாக ராகுல் மீது ஆர்.எஸ்.எஸ் நிர்வாகி அவதூறு வழக்கு தொடர்ந்தார். முன்னதாக, பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ், 2017-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பெங்களூருவில் உள்ள தனது வீட்டுக்கு வெளியே மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் மிகப் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது. இதை கண்டித்து பேசிய சீதாராம் யெச்சூரி, ஆர்எஸ்எஸ் சித்தாந்தம் கொண்டவர்கள் தான் கௌரி லங்கேஷை கொலை செய்தனர் என்று குற்றம்சாட்டினார்.

இதேபோல், பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ், கொல்லப்பட்ட 24 மணி நேரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல், பாஜக, ஆர்எஸ்எஸ் சித்தாந்தங்களுக்கு எதிராக பேசுபவர்களுக்கு பல அழுத்தங்கள் கொடுக்கப்படுகிறது, தாக்குதலுக்கு ஆளாகின்றனர், சில நேரங்களில் கொலையும் செய்யப்படுகின்றனர் என்று கூறினார். இதையடுத்து, ஆர்எஸ்எஸ் நிர்வாகியும் வழக்கறிஞருமான த்ருதிமான் ஜோஷி 2017ல், மும்பை பெருநகர நீதிமன்றத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்தி மற்றும் சீதாராம் யெச்சூரி உள்ளிட்டோருக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் ராகுல் காந்தி, சீதாராம் யெச்சூரிக்கு நீதிமன்றம் கடந்த பிப்ரவரி மாதம் சம்மனும் வழங்கியது. எனினும், தனி நபர் விமர்சனத்திற்கு கட்சி பொறுப்பல்ல என்று கூறி சோனியா காந்தி மற்றும் சிபிஎம் கட்சிக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்தது மும்பை பெருநகர நீதிமன்றம்.

இந்த வழக்கு இன்று மும்பை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது ராகுல் காந்தி ஆஜரானார். அப்போது இந்த வழக்கில் தான் குற்றவாளி இல்லை என  காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்தார். இந்நிலையில் அவருக்கு காங்கிரஸ் நிர்வாகி ஏக்நாத் கெய்க்வாட் ஜாமின் கேட்டார். 15 ஆயிரம்  உத்தரவாதத்தில் ராகுல் காந்தி ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.