அரசியலில் பரம எதிரியான சந்திரபாபு நாயுடுவுடன் கூட்டணி ஏன் என்பது குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விளக்கம் அளித்துள்ளார்.

ஆந்திராவில் பிரபல நடிகராக இருந்து அரசியலுக்கு வந்தவர் என்.டி.ராமாராவ். தெலுங்குதேசம் எனும் கட்சியை தொடங்கிய அவர் அந்த கட்சியை காங்கிரசுக்கு சிம்ம சொப்பனமாக மாற்றினார். அந்த கட்சி தொடங்கப்பட்டது முதல் காங்கிரசுக்கு எதிரான அரசியலையே மேற்கொண்டு வந்தது. இதனால் காங்கிரஸ் – தெலுங்கு தேசம் கட்சிகள் அரசியல் அரங்கில் பரம வைரிகளாக வர்ணிக்கப்பட்டன. 

இந்த நிலையில் திடீர் திருப்பமாக டெல்லி சென்ற ஆந்திர முதலமைச்சரும் தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு ராகுல் காந்தியை சந்தித்து பேசினார். இதனை தொடர்ந்து தெலுங்கானா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் – தெலுங்கு தேசம் கூட்டணி உருவானது. அரசியல் அரங்கியல் எலியும் பூனையுமாக இருந்த கட்சிகள் தேர்தல் ஆதாயத்திற்காக ஒன்று சேர்ந்துள்ளதாக விமர்சனங்கள் எழுந்தன.

ஆந்திராவை இரண்டாக பிரித்த காங்கிரசுடன் சந்திரபாபு நாயுடு கூட்டணி வைத்து துரோகம் செய்துவிட்டதாக கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் ராகுல் காந்தி தேர்தல் பிரச்சாரத்திற்காக தெலுங்கானா சென்று திரும்பினார். இது குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு ராகுல் காந்தி பேட்டி அளித்தார். அப்போது அவரிடம், திடீரென அரசியல் எதிரியான சந்திரபாபு நாயுடுவுடன் சேர்ந்தது ஏன் என்று கேட்கப்பட்டது.

 

 இதற்கு பதில் அளித்த ராகுல் காந்தி சந்திரபாபு நாயுடுவின் கட்சி தங்களுக்கு எதிரியாக இருந்துள்ளத தவிர விரோதியாக இருந்தது இல்லை என்றார். மேலும் மோடி எனும் தீய சக்தியை எதிர்க்க சந்திரபாபு நாயுடு மட்டும் இல்லாமல் நாடு முழுவதும் உள்ள பிராந்திய கட்சித் தலைவர்களை ஒருங்கிணைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாகவும் ராகுல் காந்தி கூறியுள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் மோடியை வீழ்த்தவே சந்திரபாபு நாயுடுவுடன் இணைந்து செயல்பட காங்கிரஸ் ஒப்புக் கொண்டுள்ளதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.