மக்களவையில் நடைபெற்று வரும் நம்பிக்கை இல்லா தீர்மானத்தின்போது பேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடி நாட்டு மக்களை புரிந்து கொள்ளவில்லை என்றும், அவர் பொய்யான தகவல்களையே தருகிறார் எனவும்  ஆவேசமாக குற்றம்சாட்டினார். ராகுலின் ஆக்ரோஷமாக பேச்சை அவரது கட்சிக்கார்களே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அதே நேரத்தில் ராகுலின் பேச்சுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பாஜகவினர் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்ததால் அவை சிறிது நேரம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

கடந்த நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் முற்றிலும் முடங்கிப்போன நிலையில் தெலுங்கு தேசம் கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் எடுத்துக் கொள்ளப்படவில்லை.

இந்நிலையில்  நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று முன் தினம் தொடங்கியது. அவை தொடங்கிய முதல் நாளே, மோடி அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரக்கோரி தெலுங்கு தேசம் கட்சி  சார்பில் சபாநாயகர் சுமித்ரா மகாஜனிடம் நோட்டீஸ் அளிக்கப்பட்டது.  அனைவரும் ஆச்சரியப்படும்படியாக சபாநாயகர் அதனை ஏற்றுக்கொண்டு இன்று நம்பிகை இல்லாத் தீர்மானம் குறித்து விவாதம் நடத்தவும் மாலை 6 மணிக்கு அதன் மீது வாக்கெடுப்பு நடத்தவும் ஒப்புதல் அளித்தார்.

இதையடுத்து நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசினார். அவரின் ஆவேச பேச்சு அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. பிரதமர் மோடி இந்த நாட்டிற்காக உழைக்கவில்லை என்றும் சில தொழிலதிபர்களுக்காக மட்டுமே உழைக்கிறார் எனவும் குற்றம்சாட்டினார்.

தேர்தல் பிரச்சாரத்தின்போது சுவிஸ் வங்கியில் இருந்து கருப்புப் பணத்தை மீட்டு இந்தியர்கள் ஒவ்வொருவரின் கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் போடுவதாக கூறினார். அது எங்கே? ஆண்டுக்கு 2 கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்றும் உறுதி அளித்தார், அது எங்கே? என கடுமையாக கேள்வி எழுப்பினார்.

பிரதமர் நாட்டு மக்களுக்கு பொய்யான தகவல்களை மட்டுமே தருகிறார். அவர் நாட்டு மக்களை புரிந்து கொள்ளவில்லை என்றார்.

பிரதமர் மோடி என கண்களைப் பார்த்து பேச வேண்டும். ஆனால் அவரால் அது முடியாது. அவர் என்னை பார்ப்பதைத் தவிர்க்கிறார். மோடியின் புன்னகையில் ஒரு பதற்றம் தெரிகிறது என தனிப்பட்ட முறையில் சரமாரியாக தாக்கிப் பேசினார்.

நாட்டில் பழங்குடியின மக்களும், தலித்துகளும் தாக்கப்பட்டனர், பெண்களுக்கு எதிராக தாக்குதல்கள் நடத்தப்பட்டன. ஆனால் அவற்றை எல்லாம் பார்த்துக் கொண்டு மோடி மௌனமாக இருந்தார் ராகுல் என குற்றம்சாட்டினார்.

ரபேல் போர் விமானங்கள் வாங்கியதில் பிரதமரின் நண்பர்கள் பலன் அடைந்திருக்கிறார்கள் எனவும் ராகுல் கடுமையாக குற்றம்சாட்டினார். ரபேல் ஒப்பந்த விவகாரம் மற்றும் அமித்ஷாவின் மகன் குறித்து ராகுல் காந்தி பேசும்போது பாஜகவினர் அவரை பேசவிடாமல் கூச்சலிட்டனர்.