உத்தரபிரதேசத்தில் தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசிய பிரதமர் மோடி, எனது மதிப்பை சீர்குலைப்பதற்கே ராகுல் காந்தி ரபேல் விமான ஒப்பந்தத்தில் என்னை குற்றம் சாட்டி வருகிறார்.

உங்கள்  தந்தை ராஜீவ்காந்தி நேர்மையானவர் என்று அவரது விசுவாசிகளால் கூறப்பட்ட நிலையில் அவர் தன் வாழ்க்கையின் இறுதி கட்டத்தில் ஊழலில் ‘நம்பர் ஒன்’னாக திகழ்ந்தார் என்று கடுமையாக விமர்சனம் செய்தார். போபர்ஸ் பீரங்கி பேர ஊழல் வழக்கில் ராஜீவ்காந்தி மீது குற்றம் சாட்டப்பட்டதை சுட்டிக்காட்டி மோடி பேசினார்.

மேலும் எனது செல்வாக்கை சிதைத்து, என்னை சிறுமைப்படுத்த நினைப்பவர்கள் நாட்டில் நிலையற்ற, பலவீனமான அரசு அமைய வேண்டும் என விரும்புகிறார்கள். நான் பிறக்கும்போது தங்க தட்டிலோ, வசதியான குடும்பத்திலோ பிறக்கவில்லை என ராகுல் காந்தியையும் விமர்சித்தும்  மோடி பேசினார்.

மோடியின் இந்த பேச்சுக்கு  தனது டீவிட்டர் பக்கத்தில் பதிலடி கொடுத்துள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி , மோடிஜி, போர் முடிந்துவிட்டது. உங்களது கர்மா உங்களுக்காக காத்திருக்கிறது. என் தந்தையை பற்றிய உங்களின் உள் நம்பிக்கைகளை பரப்புவது எந்த விதத்திலும் உங்களை பாதுகாக்காது. உங்களுக்கு எனது அனைத்து அன்பும், ஒரு பெரிய அரவணைப்பும் என்று கூறியுள்ளார்.