ஒரு அடார் லவ் திரைப்படத்தில் வரும் பாடலில் நான் கண்ணடித்ததைப் போல ராகுல் காந்தியும் கண்ணடித்திருப்பது தனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக நடிகை பிரியா வாரியர் தெரிவித்துள்ளார்.

மத்தியல் ஆளும் பாஜக அரசு மீது தெலுங்கு தேசம் கட்சி சார்பில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானம் மீது இன்று மக்களவையில் விவாதம் நடைபெற்றது.

இதில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி,  பிரதமர் மோடி இந்த நாட்டிற்காக உழைக்கவில்லை என்றும் சில தொழிலதிபர்களுக்காக மட்டுமே உழைக்கிறார் எனவும் குற்றம்சாட்டினார்.

தேர்தல் பிரச்சாரத்தின்போது சுவிஸ் வங்கியில் இருந்து கருப்புப் பணத்தை மீட்டு இந்தியர்கள் ஒவ்வொருவரின் கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் போடுவதாக கூறினார். அது எங்கே? ஆண்டுக்கு 2 கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்றும் உறுதி அளித்தார், அது எங்கே? என கடுமையாக கேள்வி எழுப்பினார்.

பிரதமர் நாட்டு மக்களுக்கு பொய்யான தகவல்களை மட்டுமே தருகிறார். அவர் நாட்டு மக்களை புரிந்து கொள்ளவில்லை என்றார்.

பிரதமர் மோடி எனது கண்களைப் பார்த்து பேச வேண்டும். ஆனால் அவரால் அது முடியாது. அவர் என்னை பார்ப்பதைத் தவிர்க்கிறார். மோடியின் புன்னகையில் ஒரு பதற்றம் தெரிகிறது என தனிப்பட்ட முறையில்  ராகுல் சரமாரியாக தாக்கிப் பேசினார்.

இதையடுத்து தனது பேச்சை முடித்துக் கொண்ட ராகுல் காந்தி, நேராக மோடியின் இருக்கைக்குச் சென்று அவரை கட்டிப் பிடித்து வாழ்த்தினார். இதை சற்றும் எதிர்பாராத மோடி, ராகுலை அழைத்து கைகுலுக்கி பாராட்டுத் தெரிவித்தார்.

அதன் பின்னர் தனது இருக்கைக்கு வந்து அமர்ந்த ராகுல்காந்தி, அருகில் இருந்த சக எம்.பி.யைப் பார்த்து  கண்ணடித்தார். இந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதையடுத்து நெட்டிசன்கள் மலையாள நடிகை பிரியா வாரியர் ஒரு அடார் லவ் திரைப்படத்தில் கண்ணடித்த காட்சியையும், ராகுல் கண்ணடித்த காட்சியையும் இணைத்து சமூக வலைதளங்களில் படங்களை வெளியிட்டு வருகின்றனர்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய  நடிகை பிரியா வாரியர், நான் கண்ணடித்ததைப் போல ராகுல் காந்தியும் கண்ணடித்திருப்பது தனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார்.