இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நாகப்பட்டினத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், “மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்ட மசோதாவிற்கு அதிமுக ஆதரவு அளித்துள்ளதற்கு கண்டனம் தெரிவித்துக்கொள்கிறேன். மத்திய அரசு எந்த தீங்கான சட்டங்களைக் கொண்டுவந்தாலும், அவை அத்தனையையும் கண்மூடித்தனமாக ஆதரிப்பதுதான் மாநில அரசின் ஒரே வேலையாக உள்ளது. இந்த சட்டங்களால் தமிழகத்திற்கு பாதிப்பு இல்லை என்று பஞ்சாப் வேறு, தமிழ் நாடு வேறு என்று முதல்வர் பழனிசாமி சொல்கிறார்.


மத்திய அரசு நிறைவேற்றும் சட்டம் நாடு முழுவதற்குமான சட்டமே தவிர, ஒவ்வொரு மாநிலத்துக்குமான சட்டம் அல்ல. எனவேதான் நாடு முழுவதும் விவசாயிகள் இந்தச் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். இந்தியாவில் உள்ள விவசாயிகளிலேயே 3 சட்டங்களையும் ஆதரிக்கும் ஒரே ஒரு விவசாயி எடப்பாடி பழனிசாமி மட்டும்தான்.” என்று முத்தரசன் தெரிவித்தார்.