கர்நாடக சிறைத்துறை டிஐஜி ரூபாவின் பணியிடமாற்றம் நியாயமே எனவும், குற்றச்சாட்டு உண்மையானால் அதிகாரிகள் தண்டிக்கப்படுவார்கள் எனவும் தினகரன் ஆதரவாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதைதொடர்ந்து, சிறையில் உள்ள சசிகலா, தனது பங்களாவில் இருப்பது போலவே ஆடம்பரமாக இருப்பதற்கு, சிறைத்துறை அதிகாரிகளுக்கு ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்ததாக, கர்நாடக சிறைத்துறை அதிகாரி டிஐஜி ரூபா புகார் செய்தார்.

இதையடுத்து கர்நாடக முதலமைச்சர் விசாரணை குழு அமைக்கப்படும் எனவும் அதுவரை செய்தியாளர்களை சந்திக்க கூடாது எனவும் உத்தரவிட்டார்.

அதையும் மீறி ரூபா செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். இதைதொடர்ந்து சிறைத்துறையில் இருந்த டிஐஜி ரூபா போக்குவரத்து துறைக்கு அதிரடியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.

இந்நிலையில், கர்நாடக சிறைத்துறை டிஐஜி ரூபாவின் பணியிடமாற்றம் நியாயமே என தினகரன் ஆதரவாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் செய்தியாளரகளை சந்தித்தபோது, குற்றச்சாட்டு உண்மையானால் அதிகாரிகள் தண்டிக்கப்படுவார்கள் எனவும் விசாரணை அறிக்கை விரைவில் வெளியாக உள்ளது எனவும் தெரிவித்தார்.

சிறையில் எந்த விதமான சலுகைகளையும் சசிகலா பெறவில்லை என அழுத்தமாக புகழேந்தி தெரிவித்துள்ளார்.