“சென்னையிலிருந்து தூத்துக்குடி வரை பல இடங்களில் சுங்கச்சாவடிகளும் போலீஸ் விசாரணை முகாம்களும் இருக்கின்றன. அத்தனையையும் கடந்து, அதுவும் முறையான இ-பாஸ் இல்லாமல் உதயநிதி ஸ்டாலின் தூத்துக்குடி சென்றிருப்பாரேயானால் அவரை அனுமதித்த அதிகாரிகள் அத்தனை பேரையும் சஸ்பெண்ட் செய்வதில் தவறே கிடையாது. இதை அரசு உடனடியாகச் செய்ய வேண்டும்.” என்று தெரிவித்தார்.

இ-பாஸ் இல்லாமல் உதயநிதி ஸ்டாலின் தூத்துக்குடி சென்றிருப்பாரேயானால் அவரை அனுமதித்த அதிகாரிகள் அத்தனை பேரையும் சஸ்பெண்ட் செய்வதில் தவறே கிடையாது என்று அதிமுக செய்தித் தொடர்பாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார். 
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரிகள் ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் இருவரும் ஊரடங்கு விதிகளை மீறியதாக போலீஸார் கைது செய்தனர். இருவரையும் விசாரணைக்குப் பிறகு நீதிபதியிடம் ஆஜப்படுத்தி கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைத்தனர். ஆனால், சிறையில் அடைக்கப்பட்ட இருவரும் அடுத்தடுத்து மரணடைந்தனர். இந்தச் சம்பவம் தமிழகம் மட்டுமல்லாமல், நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. விசாரணையில் போலீஸார் இருவரையும் கடுமையாக தாக்கியதே அவர்கள் உயிரிழக்க காரணம் என்ற சர்ச்சை எழுந்துள்ளது.


இந்நிலையில் தூத்துக்குடி திமுக எம்.பி. கனிமொழி, நேரடியாக ஜெயராஜ் வீட்டுக்கு வந்து, ஆறுதல் கூறி, அவரிடம் திமுக அறிவித்த 25 லட்ச ரூபாய்க்கான காசோலையை வழங்கினார். இந்நிலையில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தூத்துக்குடிக்கு சென்று ஜெயராஜ் - பெனிக்ஸ் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் உதயநிதி ஸ்டாலின் இ-பாஸ் பெறாமல் தூத்துக்குடிக்கு சென்றதாக அமைச்சர் ஜெயக்குமார் புகார் கூறினார். இதற்கு உதயநிதி ஸ்டாலின் பதில் அளிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.