தமிழக ஆளுநர் மாவட்டங்களில் ஆய்வு நடத்தச் செல்லும்போது போராட்டம் நடத்தினால் 7 ஆண்டுகள் ஜெயில் தண்டனை வித்க்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தும், கொஞ்சமும் பயப்படாமல் இன்று புதுக்கோட்டை வந்த ஆளுநருக்கு திமுகவினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்து கருப்புக் கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழக ஆளுநராக பன்வாரிலால் புரோகித் நியமிக்கப்பட்தில் இருந்து அவர் ஒவ்வொரு மாவட்டமாகச் சென்று ஆய்வு நடத்தி வருகிறார். அங்குள்ள உயர் அதிகாரிகளை வரவழைத்து மாவட்ட நிர்வாகம் குறித்து அறிக்கை பெற்றுக் கொள்கிறார்.

இதற்கு எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. ஆளுநர் மாவட்டங்களுக்குச் சென்று ஆய்வு செய்வது மாநில உரிமைகளை மீறும் செயல் என திமுக, காங்கிரஸ், இடதுசாரிகள் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

ஆனால் ஆளும் அதிமுக இதற்கு எதிர்ப்பு எதுவும் தெரிவிக்காமல் ஆளுநரின்  விசிட்டை  அமைதியாக ஏற்றுக் கொண்டுள்ளது.

ஆனால் ஆளுநர் ஆய்வு செய்வதை திமுக கடுமையாக எதிர்த்து வருகிறது. புரோகித் ஆய்வுக்காக எந்த மாவட்டத்துக்குச் சென்றாலும் கருப்புக் கொடி காட்டி திமுகவினர் போராட்டங்களை நடத்தி வருகினறனர்.

திமுகவின் இந்த தொடர் நடவடிக்கைகளால் நொந்துபோன ஆளுநர், இனி ஆளுநருக்கு கருப்புக் கொடி காட்டி போராட்டம் நடத்தினால் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று அறிவித்தார்.

அதற்கு பதிலடி கொடுத்த திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், 7 ஆண்டுகள் என்ன ஆயுள் முழுவதும் சிறையில் தள்ளினாலும், மாநில உரிமைகளை மதிக்காக ஆளுநருக்கு தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவிப்போம் என தெரிவித்திருந்தார்

இந்நிலையில் இன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆய்வு நடத்தி வருகிறார். புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி, நகராட்சி, வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள் போன்றவற்றை ஆளுநர் ஆய்வு  செய்தார்.

அப்போது ஆயிரக்கணக்கான திமுகவினர் அளுநருக்கு எதிர்ப்புத் தெரிவித்து கருப்புக் கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர், இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.

ஆளுநருக்கு எதிராக போராட்டம் நடத்தினால் 7 ஆண்டுகள் ஜெயில் தண்டனை என்ற மிரட்டலையும் மீறி திமுகவினர்  போராட்டம் நடத்திக் காட்டினர்.