நடிகர் ரஜினி செல்லும் பாதையை வைத்து பார்க்கும்போது அவர் பாஜகவின் நிழலாகச் செயல்படுவது தெரிகிறது என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
 நடிகர் ரஜினியை பல்வேறு விவகாரங்களில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி விமர்சித்துவருகிறார். பெரியார் தொடர்பான சர்ச்சை, சிஏஏ விவகாரத்தில் ரஜினியின் கருத்துகளுக்கு உடனடியாகப் பதிலடி தந்தார் நாராயணசாமி. இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த நாராயணசாமி, ரஜினியை விமர்சித்து பேட்டி அளித்தார். “சிஏஏவை எதிர்த்து வன்முறையில் யாரும் ஈடுபடவில்லை. அமைதியான முறையில்தான் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அந்தப் போராட்டத்தை சீர்குலைக்க சில சக்திகள் உள்ளே புகுந்துள்ளன. டெல்லி ஜாமியா பல்கலைக்கழகத் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் ஒருவர் கூட இன்னும் கைது செய்யப்படவில்லை.
சென்னை வண்ணாரப்பேட்டையில் மக்கள் அமைதியாகத்தான் போராட்டம் நடத்தினார்கள். போலீஸார் அடித்து துன்புறுத்தியதால்தான் தற்போது தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. சட்டத்தை சரி செய்யாத அரசு, போராட்டக்காரர்களை ஒடுக்க பல சக்திகளையும் பயன்படுத்துகிறது. ஜனநாயக நாட்டில் மாற்றுக் கருத்து சொல்ல எல்லோருக்குமே உரிமை உண்டு. அதைத் தடுப்பது ஜனநாயகமே அல்ல. சர்வாதிகாரம் என்று நீதிமன்றங்களே பலமுறை கூறியிருக்கின்றன.


பொதுவாக வெளிநாட்டில் இருந்து எந்தத் தலைவர் வந்தாலும் அவர்களை குஜராத்துக்கு அழைத்து செல்வதுதான் பிரதமர் மோடியின் வழக்கம். மற்ற மாநிலங்கள் அவருடைய கண்ணுக்கு தெரியாது போல. மேம்பாலத்தின் கீழ் குடிசை போட்டு மக்கள் வாழ்வதுதான் குஜராத் மாநிலம். அதை மறைக்க பல மொழுகுதல் வேலைகளை அரசுகள் செய்கின்றன. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வரும்போது குடிசைப் பகுதிகளை மறைத்து இந்தியா ஒளிர்கிறது என்று வாய்ப் பேசுவது சரியல்ல. நடிகர் ரஜினி செல்லும் பாதையை வைத்து பார்க்கும்போது அவர் பாஜகவின் நிழலாகச் செயல்படுவது நன்றாகவே தெரிகிறது.” என்று நாராயணசாமி தெரிவித்தார்.