கட்சியின் வாக்கு வங்கி மற்றும் மக்கள் செல்வாக்கை பெற தனித்து போட்டியிட்டால் சரியாக இருக்கும் என ரங்கசாமி ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
தமிழகம், புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளது. தமிழகத்தில் திராவிட கட்சிகள் இரண்டும் கிட்டத்தட்ட கூட்டணியை உறுதி செய்விட்டன. தொகுதி ஒதுக்கீடு, வேட்பாளர்கள் தேர்வு ஆகிய பணிகளில் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. புதுச்சேரியைப் பொறுத்தவரை ஆளும் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையை இழந்து ராஜினாமா செய்த பிறகு அங்கு குடியரசுத்தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் நல திட்டங்களை செயல்படுத்த துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தடுத்தார் என நாராயணசாமி என்னதான் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தாலும், மக்களுக்கு புதுச்சேரியின் அரசியல் நிலவரம் நன்றாக தெரியும் என்பது தற்போதைய கருத்துக்கணிப்பு மூலம் தெளிவாகியுள்ளது.

தமிழகத்தைப் போலவே புதுச்சேரியிலும் அதிமுக - பாஜக., திமுக - காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க உள்ளன. இதில் என்.ஆர்.காங்கிரஸ் யாருடன் கூட்டணி அமைக்கப்போகிறது என மக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் என்.ஆர்.காங்கிரஸ் நிர்வாகிகள் ரங்கசாமியை தனித்து போட்டியிட சொல்லி அழுத்தம் கொடுத்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகின. கட்சியின் வாக்கு வங்கி மற்றும் மக்கள் செல்வாக்கை பெற தனித்து போட்டியிட்டால் சரியாக இருக்கும் என ரங்கசாமி ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த ரெனைசான்ஸ் பவுன்டேஷன் என்ற நிறுவனம் என்ற நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பை தினமலர் நாளிதழ் வெளியிட்டுள்ளது. அதில், பாஜக - அதிமுக - என்ஆர்காங்கிரஸ் கூட்டணியும், திமுக - காங்கிரஸ் கூட்டணியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டால் பாஜக - அதிமுக- என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணிக்கு 28 இடங்களையும், காங்கிரஸ் - திமுக கூட்டணிக்கு ஒரு இடத்தையும், மாகியில் எல்.டி.எஃப் கட்சி ஒரு இடத்தையும் கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாஜக - அதிமுக ஒரு அணியாகவும், திமுக - காங்கிரஸ் ஒரு அணியாகவும், என்.ஆர்.காங்கிரஸ் தனித்து நின்றும் மும்முனை போட்டி நிலவும் பட்சத்தில் பாஜக - அதிமுக கூட்டணிக்கு 23 தொகுதிகளும், காங்கிரஸ் - திமுக கூட்டணிக்கு 3 இடங்களும், என்.ஆர்.காங்கிரஸுக்கு ஒரு தொகுதியிலும், இடதுசாரி ஜனநாயக முன்னணி (எல்.டி.எப்) ஒரு தொகுதியிலும் வெற்றி பெறும் என கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது.

புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளுக்கும் சென்று களப்பணியாளர்கள் ஒவ்வொரு தொகுதியிலும் 200 200 வாக்காளர் களிடம், மாதிரி ஓட்டுச்சீட்டு வழங்கி இந்த கருத்துக் கணிப்பை நடத்தியுள்ளதாக ரெனைசான்ஸ் பவுன்டேஷன் நிறுவனம் தெரிவித்துள்ளது.
