எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்து கொண்டு  தொடர்ந்து தேர்தல்களை சந்திப்பதென்பது பெரிய இம்சைதான். ஆனாலும் தி.மு.க.வோ அசராமல் அடித்து ஆடுகிறது. ஏப்ரலில் நாடாளுமன்ற தேர்தலையும், சட்டசபை  இடைத்தேர்தல்களையும் சந்தித்து பெரும் வெற்றியை  பெற்றனர். அதன் பின், ஒத்தி வைக்கப்பட்டிருந்த வேலூர்  நாடாளுமன்ற தொகுதி தேர்தலை சந்தித்தனர், வென்றனர். இந்த நிலையில் இதோ விக்கிரவாண்டி தொகுதியில் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு தயாராகிவிட்டனர். 

இந்த நிலையில் தி.மு.க.வில் ஒரு புது பஞ்சாயத்து. அதாவது விக்கிரவாண்டி தொகுதியின் பொறுப்பாளரான மாஜி அமைச்சர் பொன்முடி அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் ஒரு தகவல் அனுப்பியுள்ளாரம். அதாவது இடைத்தேர்தல் செலவுக்கு பணத்தைகொடுங்கள், நீங்கள் வர வேண்டிய அவசியமில்லை! என்பதுதான் அது. பரபரப்பைக் கிளப்பியிருக்கும் இந்த விவகாரம் பற்றி தி.மு.க.வினரிடம் பேசியபோது “இதுவரையில் இல்லாத புது சிஸ்டத்தை பொன்முடி இப்ப கொண்டு வரப்பார்க்கிறார். மாவட்ட செயலாளர்கள் தங்களுடைய தகுதிக்கு ஏற்றா மாதிரி பதினைந்து லட்சம் முதல் இருபத்தைந்து லட்சம் வரை அனுப்ப சொல்லி கேட்டிருக்குது பொன்முடி தரப்பு. எம்.எல்.ஏ.க்கள் எப்படியும் பத்து லட்சம் தர வேண்டியிருக்குது. அப்படி பார்த்தால் அறுபத்தைந்து மாவட்ட செயலாளர்கள், நூறு எம்.எல்.ஏ.க்கள், இருபது எம்.பி.க்கள், கட்சியின் வி.ஐ.பி.க்கள், கட்சிக்கு தோதான செல்வந்தர்கள்ன்னு குறைந்தது நூறு கோடி ரூபாய் நிதி சேர்ந்துடும்.

இந்த பணத்தை கொடுத்து விடுங்க போதும், ஆனால் நீங்க வரணும்னு அவசியமில்லை!ன்னு சொல்றது என்ன அரசியல்?” என்கின்றனர். 
இதற்கு பொன்முடி தரப்பு என்ன பதில் சொல்கிறாதென்றால்....அவர் சார்பாக பேசுபவர்களோ “அண்ணன் சொன்னதை தப்பா புரிஞ்சுக்க கூடாது. அதாவது நேரடியாக தொகுதிக்கு வந்து வேலை பார்க்க விருப்பமில்லாதவர்கள், வாய்ப்பில்லாதவர்கள் மட்டுமே பணம் மட்டும் கொடுங்கள் என்று கேட்கப்பட்டுள்ளது.

மற்றபடி நிர்வாகிகள், தொண்டர்கள் தாராளமாக வந்து கட்சிப் பணியாற்றலாம். இந்த தேர்தலில் விக்கிரவாண்டி, நாங்குநேரி என இரண்டு தொகுதிகளுக்கும் சேர்த்து இருநூறு கோடி ரூபாய் செலவு செய்ய திட்டமிட்டுள்ளது ஆளுங்கட்சி. எனவே அவர்களுக்கு ஈடு கொடுத்து, கழக வேட்பாளரை ஜெயிக்க வைக்க வேண்டியது அண்ணன் பொன்முடியாருக்கு அவசியமாக இருக்கிறது. 

கழக வெற்றிக்காகத்தான் பணம் கேட்கப்பட்டிருக்கிறது. இதற்கு முறையான கணக்கையும் அவர் காட்டிடுவார். அவர் படித்த, பண்பான அரசியல்வாதி.” என்கின்றனர். 
அப்டிங்ளா?