பயிர் கடன்கள் தள்ளுபடி  உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மகாராஷ்ட்ரா அரசு ஏற்றுக் கொண்டதையடுத்து விவசாயிகளின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

மகாராஷ்டிரா மாநில விவசாயிகள்  பயிர்கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு  கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி 50 ஆயிரம் விவசாயிகள் நாசிக் மாவட்டத்தில் இருந்து  கடந்த 6 நாட்கள் நடைப்பயணமாக 180 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மும்பைக்கு வந்திருந்தனர். 

பயிர் கடன்கள் முழுமையாக தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அனைத்திந்திய விவசாயிகள் சபை சார்பில் மும்பை ஆஸாத் மைதானத்தில் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த போராட்டத்தின் எதிரொலியால் அம்மாநில சட்டசபையில் எதிர்க்கட்சிகள் பிரச்சனையை எழுப்பினர்.

இதையடுத்து விவசாயத்துறை அமைச்சர்  போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், இந்த பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் உறுதி அளித்திருந்தார்.

இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட விவசாய சங்க பிரதிநிதிகள் 12 பேரிடன் அரசு அமைத்துள்ள 6 அதிகாரிகளை உள்ளடக்கிய குழுவினர் நேற்று பிற்பகலில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

மகாராஷ்ட்ரா முதலமைச்சர்  தேவேந்திர பட்னாவிஸ் மேற்பார்வையில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு இன்னும் இரண்டு மாதத்தில் தீர்வு காணப்படும் என்று எழுத்துப்பூர்வமாக உறுதி அளிக்க அரசு சம்மதம் தெரிவித்தது. இதையடுத்து, தங்களது போராட்டத்தை வாபஸ் பெறுவதாக விவசாயிகள் அறிவித்தனர்.

அம்மாநிலத்தில் ஒட்டுமொத்த விவசாயிகளும் ஒன்று திரண்டு தீவிரமாக போராட்டத்தில் ஈடுபட்டதால் மாநிலத்தில் ஆளும் பாஜக அரசு கடந்த ஒரு வாரமாக அச்சத்தில் இருந்தது. இந்நிலையில் விவசாயிகளின் அர்ப்பணிப்பான போராட்டத்தால் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இது இந்தியாவில் உள்ள ஒட்டு மொத்த விவசாயிகளின் வெற்றியாக பார்க்கப்படுகிறது.