தேசிய குடியுரிமை திருத்த சட்டம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதனை தொடர்ந்து டெல்லி, சென்னை உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டம் நடைபெற்றது. கடந்த 15 ஆம் தேதி டெல்லியில் உள்ள ஜாமியா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற போராட்டத்தின் போது வன்முறை வெடித்தது. 

போராட்டத்தின் போது அரசு பேருந்துகள் மீது தீவைக்கப்பட்டதால் அங்கு கலவரம் ஏற்பட்டது.கலவரத்தை கட்டுப்படுத்த காவல்துறையினர் மாணவர்கள் மீது தடியடி நடத்தினர்.

பல்கலைக்கழகத்திற்குள் போலீசார் நுழைந்து மாணவர்களை அத்துமீறி தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டது. ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில் டெல்லி ஜாமியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஏபிவிபி  மாணவர்கள் சிலர், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தின் போது டெல்லி காவல் துறையினருக்கு ஆதரவாகவும் அவர்கள் கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து அங்கு இரு தரப்பு மாணவர்களுக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது. பின்னர் போலீசார் அங்கு வந்த மாணவர்களை அப்புறப்படுத்தினர்.