கடந்த டிசம்பர் 5ம் தேதி ஜெயலலிதா மறைவுக்கு பின் அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஆனால் அக்கட்சியில் பெரும் பிளவு ஏற்பட்டது. ஓபிஎஸ் தனி அணியாக செயல்படத் தொடங்கினார்.
ஓபிஎஸ்க்கு தொண்டர்களும், பொதுமக்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
ஆனால் அதிமுக எம்எல்ஏக்கள் சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்தனர். எடப்பாடி பழனிசாமி மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற வேண்டும் என்பதால் சசிகலா தரப்பு எம்எல்ஏக்கள் சென்னை கூவத்தூர் சொகுசு விடுதியில் சிறை வைக்கப்பட்டனர்.

அவர்களுக்கு அங்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டாதாக கூறப்படுகிறது,
எம்எல்ஏக்களுக்கு தேவையான அனைத்தையும் திருவாடானை தொகுதி எம்எல்ஏவும் நடிகருமான கருணாஸ் செய்து தந்ததாக தகவல்கள் வெளியாகின. இதனால் சமூக ஊடகங்கள் அவரை மாமா என அழைத்து கிண்டல் செய்தன,
இதனால் கோபமடைந்த கருணாஸ் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
மேலும் தனக்கு வாக்களித்த 76000 வாக்காளர்கள் தவிர வேறு யாருக்கும் தன்னை கேள்வி கேட்க உரிமையில்லை என திமிராக ஊடகங்களில் பேட்டி அளித்தார். ஆனால் திருவாடானை தொகுதி மக்கள் தங்களது எம்எல்ஏவைக் காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்நிலையில் நடிகர் கருணாஸ் இன்று காலை திருவாடானை தொகுதிக்கு வந்தார். தனது ஆதரவாளர்களுடன் திருவாடானைக்குள் நுழைந்த அவருக்கு முதல்படி அதிர்ச்சி அளித்தது. கருணாஸ் வருவதை அறிந்து பேருந்து நிலையம் பகுதியில் திரண்டிருந்த பொது மக்கள் கருணாஸ் ஒழிக என கோஷமிட்டனர்.

மேலும் அவருக்கு கறுப்புக் கொடி காட்டப்பட்டது. இதையடுத்து போலீஸ் உதவியுடன் அங்கிருந்து சட்டமன்ற அலுவலகத்திற்கு சென்றார்.
அங்கும் திரண்டிருந்த பொது மக்கள், நாங்கள் உங்களுக்குத் தான் வாக்களித்தோம், எதற்காக சசிகலாவுக்கு வாக்களித்தீர்கள் என கேள்வி எழுப்பினர்.அதற்கு கருணாஸ் அளித்த பதிலில் திருப்தி அடையாத பொது மக்கள், நீங்கள் எங்களுக்குத் தேவையில்லை, உடனே தொகுதியை விட்டு வெளியேருங்கள் என முழக்கங்களை எழுப்புனர்.
கூட்டத்தில் இருந்த இளைஞர்கள் அவரை கிண்டல் செய்யும் வகையில்அழைத்தனர்.இதனால் அதிர்ந்து போன கருணாஸ் திருவாடானை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி மற்றும் போலீஸ் பாதுகாப்புடன் வேறு பகுதிக்கு சென்றார்.
