திமுக பொருளாளர் துரைமுருகனிடம் மக்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என அமமுக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கடுமையாக விமர்சித்துள்ளார்.  

வேலூர் தொகுதி அமமுக வேட்பாளரை ஆதரித்து, மண்டி வீதியில் அமமுக துணைப்பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ’’திமுக வேட்பாளரான தனது பிள்ளையை இந்த தொகுதிக்கு தத்துக்கொடுப்பதாக முன்னாள் திமுக அமைச்சர் துரைமுருகன் சொல்கிறார்.

மக்களாகிய நீங்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். 7 ஆண்டுகள் திமுக ஆட்சியில் இல்லை. திமுக ஆட்சியில் இல்லாத போதே பிரியாணி கடை, பியூட்டி பார்லர் ஆகியவற்றை அடித்து நொறுக்குகின்றனர். திமுக மோடி பக்கம் போகலாமா அல்லது காங்கிரசின் பக்கம் போகலாமா என்று பார்த்து இறுதியாக காங்கிரஸ் பக்கம் சென்றனர். 

ராகுல் காந்திக்கு பிரதமராக முதிர்ச்சியில்லை என்று கூறிய ஸ்டாலின் தற்போது ராகுல் காந்தியை பிரதமராக்க வேண்டும் என்று மாற்றி மாற்றி பேசுகிறார். மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். இங்கு அவர்கள் வென்றாலும் மத்தியில் பாஜக வென்றால் திமுகவினர் மீண்டும் மோடி பக்கம் சென்றுவிடுவார்கள். அவர்கள் பதவிக்காக எதையும் செய்வார்கள். 

அதனால் தான் 10 ஆண்டுகள் அட்டை போல் காங்கிரசை உறிஞ்சிக்கொண்டிருந்தனர். அப்போது நடந்த இலங்கை படுகொலையை கூட அவர்கள் வாய் திறந்து ஏன் என கேட்கவில்லை. ஆகவே மக்களுக்கு நன்மை செய்யும் மாநில கட்சிக்கு வாக்களிக்க வேண்டும்’’ என்று அவர் தெரிவித்தார்.